மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
First Published : 27 Aug 2009 01:34:47 AM IST
Last Updated :
27 Aug 2009 01:39:29 AM IST
பாரிமுனை: அன்றும், இன்றும்...
படத்தின் வலது புறத்தின் முன் பக்கம் ஒரு கோபுரத்துடனும், அதைத் தொடர்ந்து
மற்றொரு கோபுரத்துடனும் இரண்டு கட்டடங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. 1910-ம்
ஆண்டில் இந்தக் கட்டடங்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியாகவும், அதன் விடுதியாகவும் செயல்பட்டன. காலச் சக்கரம் சுழல, பழமை
மாறி புதுமை புகத் தொடங்கின. விடுதிக் கட்டடம் இடிக்கப்பட்டது. அந்தக் கட்டடம், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைமை
இடமாக இப்போது செயல்பட்டு வருகிறது. ஆன்டர்சன் அரங்கம் என அழைக்கப்பட்ட கிறிஸ்தவக்
கல்லூரியின் கட்டடத்தை "பாம்பே பரஸ்பர காப்பீட்டு நிறுவனம்' விலைக்கு வாங்கி,
எழில்மிகுந்த புதிய கட்டடத்தைக் கட்டியது. அது இப்போது, மைசூர் ஸ்டேட் வங்கியாக செயல்பட்டு வருகிறது. அதன் அருகில், தனது பழமையை மாற்றிக் கொள்ளாமல் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் ஆண்டர்சன் கிறிஸ்தவ தேவாலயம்.
அன்றைய சென்னை எங்கு பார்த்தாலும் மரங்களும், செடி, கொடிகளுமாக பச்சைப்பசேல்
என காட்சி அளிக்கும். இன்றைய கான்கிரீட் காடுகள் அன்று இல்லை. அப்போது சுத்தமான,
அழகான, ரசிக்கும்படியான சென்னையாக இருந்தது.
சாதாரண மக்களின் போக்குவரத்துக்கு டிராம் வண்டிகள் உண்டு. குறைந்த
எண்ணிக்கையில்தான் கார்கள் தென்படும். டிராம் வண்டிகளில் படித்தவர்களும்,
பாமரர்களும் பயணம் செய்வார்கள். காய்கறி வியாபாரம் செய்வோரும் கூட அதில் ஏறிக்
கொள்வார்கள். அதில் பயணிப்பதே ஒரு சுகம்.
இன்று பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பது, சங்கிலி பறிப்பது, பிளேடு போடுவது
எல்லாம் அன்றைய டிராம் வண்டிகளில் கிடையாது. மின்சார ரயிலும் உண்டு. எல்லா
இடங்களிலும் கூட்டம் குறைவாகவே இருக்கும். அதனால் டென்ஷன், கோபம் வராது. அமைதியான
வாழ்க்கையாக இருந்தது.
மவுண்ட் சாலை (இன்றைய அண்ணா சாலை) பளிச்சென இருக்கும். கையை வீசி நடக்கலாம்.
சைக்கிளில் செல்லலாம். போக்குவரத்து நெரிசல் கிடையாது.
பெரம்பூர், தியாகராய நகர், விவேகானந்தர் இல்லம், அடையாறு போன்ற இடங்களுக்கு
போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், பாரிமுனைதான் பெரிய பஸ் நிறுத்தமாகக்
கருதப்பட்டது. உயர் நீதிமன்றத்தை ஒட்டிய "எஸ்பிளனேட்' பகுதியில் சாலையோரமாக பாரிமுனை
பஸ்கள் வரிசையாக நிற்கும்.
ராஜா அண்ணாமலை மன்றத்துக்கு அருகில்தான் வெளியூர் செல்லும் மத்திய பஸ் நிலையம்.
மொத்த காய்கறி மார்க்கெட்டான கொத்தவால்சாவடியும் பாரிமுனை அருகில்தான் இருந்தது.
ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படும் பகுதிதான் சென்னையின் பிரதானப் பகுதியாகத்
திகழ்ந்தது எனலாம். பெரிய துணிக் கடைகள், நகைக் கடைகள், மொத்த விற்பனையாளர்கள் என்று
அங்கேதான் இருப்பார்கள். இப்போது சுபாஷ் போஸ் சாலை என்று அழைக்கப்படும் இடம் அப்போது
சைனா பஜார் என்று அழைக்கப்பட்டது.
அன்றைய சென்னையின் உயிர்த் துடிப்பு என்பதே பாரிமுனை, சைனா பஜார், மவுண்ட்
ரோடு பகுதிகள்தான். திருவல்லிக்கேணி, மைலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகள்
குடியிருப்புப் பகுதிகள்.
மாலை வேளையில் காற்று வாங்க மெரீனா கடற்கரைக்குச் செல்வது என்பது
பெரும்பாலோரின் பொழுதுபோக்கு. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் போன்றவர்கள் அங்கே
கூடுவது வழக்கம்.
இத்தனை திரையரங்குகள் இருக்கவில்லை என்று ஞாபகம். கை ரிக்ஷா, ஜட்கா வண்டி
இரண்டுமே பரவலாக இருந்தது. மின்சார ரயிலிலும், பஸ்களிலும் மதிய உணவைக் கேரியரில்
சுமந்துகொண்டு வந்து கொடுக்கும் பணியில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
தினமும் வீடுகளிலிருந்து கேரியரைப் பெற்றுக்கொண்டு, அலுவலகத்தில் வேலை
பார்ப்பவர்களுக்கு எடுத்துச் செல்வதும், சாப்பிட்ட பிறகு திருப்பிக் கொண்டு
கொடுப்பதும் இவர்கள் பணி. கேரியரில் மிச்சம் உள்ள உணவைக் குறைந்த விலைக்கு
ஏழைகளுக்கும், பாட்டாளிகளுக்கும் அவர்கள் கொடுக்கும் வழக்கமும் இருந்தது.
கோகலே ஹால், செயின்ட் மேரிஸ் ஹால் ஆகியவற்றில் அரசியல் பேச்சுகள் நடக்கும்.
எல்லோரது பேச்சுகளிலும் நாகரிகம் இருக்கும். தனிநபர் தாக்குதல் இருக்காது. யாரும்
வரம்பு மீறமாட்டார்கள்.
நான் சென்னை சென்றதும் சத்தியமூர்த்தி பவனுக்குப் பின்புறம் உள்ள "சுபத்திராபாய்
மேன்ஷன்' கட்டடத்தில்தான் தங்கினேன். அங்கு இயங்கி வந்த "சினிமா உலகம்'
பத்திரிகையில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன், அவரது அண்ணன் கோமதிநாயகம் ஆகியோர்
பணியாற்றி வந்தனர். எனது எழுத்துலக குருநாதர் வல்லிக்கண்ணன். எனவே, அவருடன் தங்கி
இருந்தேன்.
"சினிமா உலகம்' பத்திரிகையை சீர்காழி கோவிந்தராஜனின் நெருங்கிய உறவினர் பி.எஸ்.
செட்டியார் நடத்தி வந்தார். "சினிமா உலகம்' அலுவலகத்துக்கு வரும் நாடகக்
காட்சிகளுக்கான இலவச டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு நாங்கள் நாடகம் பார்க்கச்
செல்வோம். டி.கே. சண்முகம், எம்.ஆர். ராதா ஆகியோரின் நாடகங்களை அதிகம் பார்ப்போம்.
இன்றைய சென்னை மாநகரத்தை அன்றைய பார்வையில் இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.
தென் சென்னை என்பது படித்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என
பணம் படைத்தவர்கள் வசித்த இடம். வடசென்னை என்பது தொழிலாளர்கள் வசிக்கும் இடம்.
ஏழ்மையும், வறுமையும் மண்டிக் கிடந்த பகுதி.
திருவல்லிக்கேணியில் இருந்த "முரளி கபே'யில் உயர் சாதியினர் உணவருந்த தனி இடம்
உண்டு. அதை எதிர்த்து பெரியார் போராட்டம் நடத்தினார். ஆனால், உட்லண்ட்ஸ் போன்ற
ஹோட்டல்களில் அதுமாதிரி கிடையாது. ஆயிரம்விளக்கு கபே, ரத்னா கபே, சாந்தா பவன்,
ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், உடுப்பி ஹோட்டல் போன்றவைதான் அன்றைய பிரபல உணவு விடுதிகள்.
இப்போதுபோலத் தடுக்கி விழுந்தால் ஹோட்டல் என்பதுபோல எல்லாம் கிடையாது.
பாரதிதாசன் கம்பீரமாக உடையணிந்து ரிக்ஷாவில் செல்வதை நேரடியாகப்
பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி பெரிய ஆள்களை எல்லாம் எளிதாகப் பார்க்க முடியும்.
அன்றைய சென்னையிலும் சேரிகள் இருந்தன. ஆனால், இன்று மாதிரி கிடையாது. கூவம்
இந்த அளவுக்கு நாறாது. இப்போது எல்லாமே மாறிவிட்டது. சுருங்கச் சொன்னால் அன்றைய
சென்னைதான் சிங்காரச் சென்னை.
தி.க.சிவசங்கரன் (தி.க.சி.)