லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் உதவியாளர் கைது குறித்து விசாரணை: ஜாங்கிட் உத்தரவு
First Published : 31 Jul 2010 01:23:07 AM IST
Last Updated :
31 Jul 2010 02:02:44 AM IST
சென்னை, ஜூலை 30: லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் உதவியாளர் ஏ. சங்கர், கடந்த 21-ம் தேதி மதுரவாயல் போலீஸôரால் கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள அம்பத்தூர் துணை கமிஷனருக்கு புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.இது குறித்த விவரம்: கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும் தொலைபேசியில் பேசிய உரையாடல் நாளிதழ் ஒன்றில் வெளியானது.இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ. சங்கர் சிபிசிஐடி போலீஸôரால் 2008 ஜூலையில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.எனினும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் மீதான துறை சார்ந்த விசாரணையும் நிலுவையில் உள்ளது.கடந்த 21-ம் தேதி காலையில் மதுரவாயலில் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த சுதாகர் என்பவரை தாக்கியதாக மதுரவாயல் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 23-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தனியார் இணையதளம் ஒன்றில் குறிப்பிட்ட சில உயரதிகாரிகள் தொடர்பாக வெளியான தகவல்களால் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியிலேயே சங்கர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அப்போது பரவலாக கூறப்பட்டது.புறநகர் போலீஸில் புகார்: இந்த நிலையில் ஏ. சங்கர், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணி அளவில் தன்னை வீட்டிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீஸôர், 9 மணிக்கு சாலையில் சி. சுதாகர் என்பவருடன் பிரச்னை ஏற்பட்டதாக 10 மணிக்கு வழக்குப் பதிவு செய்து 12 மணிக்கு கைது செய்ததாக நீதிமன்றத்தில் ஆவணங்களை அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் மதுரவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் சி.ஜே. ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில், சுதாகர் என்பவர் அளித்ததாக கூறப்படும் புகாரின் உண்மைத் தன்மை குறித்தும் விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் சங்கர் குறிப்பிட்டிருந்தார்.ஜாங்கிட் உத்தரவு: சங்கர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் ஜாங்கிட், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஜான் செல்லையாவுக்கு உத்தரவிட்டார்.