சென்னை, செப். 29: கமல்ஹாசனை அருகில் இருந்து பார்த்துப் பழகிதான் நான் நடிப்பைக் கற்றேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.இந்தியத் திரையுலகில் கமல்ஹாசனின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி அவருக்கு விஜய் டி.வி. பிரமாண்டமான பாராட்டு விழாவை சென்னையில் திங்கள்கிழமை நடத்தியது.இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:

விழாவில் கமல்ஹாசனுடன் (இடமிருந்து) நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, வெங்கடேஷ், சரத்குமார், மோகன்லால்
இந்த அதிசய, அபூர்வ விழாவில் பலரும் கமலைப் பாராட்டி பேசினார்கள். நான் பேச வேண்டுமானால் தொடர்ந்து இரண்டு நாள்கள் வேண்டும். கமல் என்னுடைய கலையுலக அண்ணா. இன்று இருக்கும் பலருக்கு கமல் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பது தெரியாது. நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் கமல் இப்போது இருப்பதை விட மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தார்.
"அபூர்வ ராகங்கள்', "அவள் அப்படித்தான்', "ஆடு புலி ஆட்டம்', "16 வயதினிலே' உள்ளிட்ட படங்களில் நாங்கள் இணைந்து நடித்துள்ளோம்.
அப்போது கமல் சொன்னால் என்னை படத்திலிருந்தே எடுத்திருப்பார்கள். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்க விடாமல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. "இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என எனக்கு சிபாரிசு செய்ததே கமல்தான்.
பிரிந்த காரணம்"நினைத்தாலே இனிக்கும்' படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசிப் படம். அப்போது என்னை அழைத்த கமல், ""இனி நாம் இணைந்து நடிக்க வேண்டாம் ரஜினி; அப்படி நடித்தால் உங்களை வளர விடாமல் செய்துவிடுவார்கள்; நீங்கள் பெயர், புகழ் சம்பாதிக்க முடியாது. தனியாக நடித்து நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
விழாவில் கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கே.பாலசந்தர்மேலும், தமிழ் சினிமாவை நீண்ட காலமாக நான் பார்த்து வருபவன். சினிமாவைத் தாண்டி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நெருக்கமாக இருந்தாலும் சிலர் சுயநலத்துக்காகப் பிரித்ததால் அவர்களுடைய ரசிகர்களும் பிரிந்தனர். அந்த நிலை நமது ரசிகர்களுக்கு நேரக்கூடாது. அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியவர்.
சிரஞ்சீவி, வெங்கடேஷ், அமிதாப், திலீப்குமார், மம்முட்டி, மோகன்லால் உள்பட பலரும் கமல் என்ற ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கும் இடத்தில் ரஜினி எப்படி ஹீரோ ஆனான் என நினைக்கலாம். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்...
நீங்களெல்லாம் கமலை தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள். நான் கமலை அவருக்கு அருகில் இருந்து நெருக்கமாகப் பார்த்து பழகி அவரிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டதால்தான் நடிகன் ஆனேன்.
இப்படிப்பட்ட கமல் இருக்கும்போது நான் எப்படி வளர்ந்தேன்?
நான் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தேன். கமல் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்னால் முடியாது. நான் தொட்டதை கமல் தொட்டிருக்கிறார். ஆனால் அவர் தொட்டதை நான் தொடவில்லை.
கலைத்தாயின் அன்புக்குழந்தை
கமல்தான் உண்மையான சகலகலா வல்லவன். அவருக்குக் கலைத்தாயின் அம்சம் இருக்கிறது. அதனால் கலைத்தாயே அவரை பல ரூபங்களில் ரசிக்கிறாள். மோகன்லால், மம்முட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மற்றும் என்னைப் போன்றவர்களையெல்லாம் கலைத்தாய் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறாள். ஆனால் கமலை மட்டும் தோளில் வைத்துக் கொஞ்சுகிறாள்.
""இது நியாயமா? நாங்களும் உன் குழந்தைகள்தானே! ஏன் இந்த பாரபட்சம்?'' என கலைத்தாயிடம் நான் கேட்டேன். அதற்கு ""ரஜினி, நீ போன ஜென்மத்தில்தான் நடிகனாக ஆசைப்பட்டாய். கமல் கடந்த 10 ஜென்மங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறான். அதனால்தான் கமலைத் தோளில் வைத்துக் கொண்டாடுகிறேன்'' என்றார்.
கமல், கலைத்தாயின் அன்புக் குழந்தை. இது ஒரு வரலாற்று நிகழ்வு. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்; நானும் நடித்தேன் என்ற பெருமை போதும்'' என கமல்ஹாசனுக்குப் புகழாரம் சூட்டினார் ரஜினி.
கமல்ஹாசனைக் கட்டித் தழுவி பாராட்டும் ரஜினிகாந்த்
யுக புருஷன்
இயக்குநர் கே.பாலசந்தர் பேசும்போது...""நான் கமலுக்கு குரு என எல்லோரும் சொல்லுவர். ஆனால் நான் அதைச் சொல்வதில்லை. கமலுக்கு நான் தேவையில்லை. என் இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ இருந்திருந்தால் கூட போதும். கமல் இந்த நிலையை எட்டியிருப்பார். அந்த அளவுக்குத் திறமையானவர். கமல் ஒரு யுக புருஷன். "தசாவதாரம்' வரை சாதித்துவிட்டார். அதையெல்லாம் மிஞ்ச வேண்டும் என்பதுதான் என் கவலையெல்லாம்; கமல் அதை மிஞ்சிக் காட்டுவார்'' என்றார்.
எல்டாம்ஸ் சாலைக்கு கமல் பெயர்நடிகர் சரத்குமார் பேசும்போது... கமல்ஹாசன் வசித்துவரும் எல்டாம்ஸ் சாலைக்கு டாக்டர் கமல்ஹாசன் சாலை எனப் பெயர் சூட்ட வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் சங்கம் சார்பாகக் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அதுகுறித்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
கமலுக்கு சவால்நடிகர் மம்முட்டி பேசும்போது...
""கமல்ஹாசன் மலையாளத்தில் 41 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் அவரை எங்கள் மலையாளத் திரையுலகில் ஒருவராகத்தான் பார்க்கிறோம். அவர் எங்கள் மண்ணுக்கும் சொந்தக்காரர். எனக்கும் கமலுக்கும் ஒரு சவால் இருக்கிறது. நானும் அவரும் இதுவரை மூன்று தேசிய விருதுகள் பெற்றிருக்கிறோம். நான்காவது முறையாக விருது பெறப்போவது யார் என்பதில் எங்கள் இருவருக்கும் ஆரோக்கியமான போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கமல் நல்ல நடிகர் என்பதோடு நல்ல மனிதரும் கூட'' என்றார்.
கமலை பின்பற்றாதீர்கள்நடிகர் மோகன்லால் பேசும்போது...
""கமல்ஹாசன் எங்கள் மலையாளத் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். நம்மவர் என்றுதான் அவரைப் பார்க்கிறோம். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். நான் மற்ற நடிகர்களிடமும் இளம் நடிகர்களிடமும் கேட்டுக்கொள்வதெல்லாம் கமல்ஹாசனைப் பின்பற்றாதீர்கள் என்பதுதான். அவரைப் போல் நடிப்பது சிரமம். தோற்றுவிடுவீர்கள். அதனால் புதிய பாணியைக் கடைப்பிடியுங்கள்'' என்றார்.
கமலும் காதலும்நடிகை ராதிகா பேசும்போது...
""கமல் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்தப் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளைக் கமல் காதலிப்பார் என்றே நான் நினைத்திருக்கிறேன். "சிப்பிக்குள் முத்து' படத்தில் அவருடன் நடித்தபோதுதான், கதாநாயகி என்று இல்லை; அந்த இடத்தில் ஒரு மாடு, ஒரு கல் இருந்தால் அவற்றைக் கூட கலைக்காகக் கமல் காதலிப்பார் எனத் தெரிந்துகொண்டேன்'' என்றார்.
கமலும் முத்தமும்நடிகை ஊர்வசி பேசும்போது...""நான் கமல்ஹாசனுடன் "அந்த ஒரு நிமிடம்' படத்தில் முதல்முறையாக நடித்தேன். அப்போது என்னிடம் பேசிய பலரும்... ""கமல் அவர் படத்தில் நடிக்கும்போது எப்படியாவது ஒரு காட்சியில் முத்தம் கொடுத்துவிடுவார். அதனால் உஷாராக இரு'' என்றன். அந்தப் படத்தில் கமலுடன் நான் நெருக்கமாக இருப்பது போல நான்கு ஐந்து காட்சிகள் இருந்தன. அதனால் எப்போது முத்தம் கொடுப்பாரோ என பயந்துகொண்டே இருந்தேன். அந்தக் காட்சியும் வந்தது. கமல் அருகில் வந்து ஒரு வசனத்தைச் சொல்லி நடித்து சென்றுவிட்டார். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்யவில்லை. காட்சி நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் அருகில் வந்து ஒரு வசனத்தைப் பேசி நடித்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் "மைக்கேல் மதனகாமராசன்' படத்தில் என்னை நடிக்க வைத்தார். எனக்குள் இருக்கும் நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி என்னையே எனக்குப் புதிதாக அடையாளம் காட்டியவர். கமல் என் மதிப்புக்குரிய ஆசான். நான் அவருடைய பணிவான மாணவி'' என்றார்.
விழாவில், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த நடிகைகள் (இடமிருந்து) மீனா, ரேவதி, லிசி, நிரோஷா, ஊர்வசி, ராதிகா, கெüதமி, ஜெயசித்ரா, ரோகினி, சரண்யா, ஷோபனா, தபு
.
நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது...
""என்னைப் போன்ற பல ஏகலைவர்களுக்கு கமல்தான் துரோணர். அவருடைய இந்த நிலைக்கு ஓயாத தேடலும் சலிக்காத உழைப்பும்தான் காரணம். என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு வருடத்தில் சிறந்த நடிகர் விருது கிடைக்கலாம். ஆனால் நூற்றாண்டின் சிறந்த நடிகர் என்றால் அது கமல் மட்டுமே. திரையுலகில் மற்றவர்களுக்குப் பேராசிரியராக இருக்கும் கமல், தான் மட்டும் எப்போதும் மாணவனாகவே இருக்கிறார். தமிழ் சினிமா கமலுக்குக் கொடுத்ததை விட பல மடங்கு அதிகமாக தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் கமல் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
விழாவில் ஏவி.எம்.சரவணன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், கே.விஸ்வநாத், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சேரன், லிங்குசாமி, மிஷ்கின், நடிகர்கள் ஜெயராம், வெங்கடேஷ், பிரபு, சிவக்குமார், பிரகாஷ்ராஜ், விவேக், பார்த்திபன் நடிகைகள் சரோஜாதேவி, இசையமைப்பாளர் இளையராஜா, லதா ரஜினிகாந்த், கமல் மகள்கள் ஷ்ருதிஹாசன், அக்ஷரா மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
மூத்த நடன இயக்குநர் சுந்தரம், அவருடைய மகனும் நடிகருமான பிரபுதேவா, நடிகர், நடிகையர் மற்றும் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.