நெடிமோழியனூரில் மீண்டும் மர்ம தீ
First Published : 30 Jul 2010 01:53:57 PM IST
Last Updated :
விழுப்புரம், ஜூலை 29: திண்டிவனம் அருகே உள்ள நெடிமோழியனூரில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவியது. கடந்த 22-ம் தேதி நடந்த தீ விபத்தில் இரு பெண்கள் பாதிக்கப்பட்டு, அதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொருபெண் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ÷இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அது முதல் அந்த கிராமத்தில் தீ விபத்து ஏற்படவில்லை. அமைதியாக இருந்து வந்த கிராமத்தில் புதன்கிழமை மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. ÷அந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மற்றும் அவரின் மகன் சக்திவேல், மருமகள் தீபா மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் புதன்கிழமை இரவு வீட்டில் படுத்திருந்தனர். ÷அப்போது அதிகாலை சுமார் அதிகாலை 4.30 மணிக்கு குழந்தை அழுததாம். அமைதிப்படுத்துவதற்காக தீபா குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றார். அங்கு குழந்தையும், தாயும் படுத்திருந்த கட்டிலில் இருந்த மெத்தையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ÷உடனே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி தீயை அணைத்துள்ளனர். இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்த கிராமத்தில் மீண்டும் மர்மத் தீ பரவத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.