நாடாளுமன்றம் முடக்கம்: பிரதமருடன் சுஷ்மா ஆலோசனை
First Published : 31 Jul 2010 01:49:50 AM IST
Last Updated :
புது தில்லி, ஜூலை 30: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கி நான்கு நாட்களாகியும் எந்த அலுவலும் நடைபெறாமல் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.÷இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை முதல் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும் எனத் தெரிகிறது.÷விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்ற நிலையிலிருந்து பாஜக இறங்கிவந்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே காங்கிரஸ் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாதை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார். அவரும் தனது நிலையிலிருந்து இறங்கிவந்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் விலைவாசி உயர்வு தொடர்பாக வெறும் விவாதம் நடத்துவதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.÷எனவே வரும் திங்கள்கிழமை முதல் இரு அவைகளும் சுமுகமாக செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அன்றைய தினம் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி பாஜக சார்பில் புதிய நோட்டீஸ் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.