தலிபானுடனான ஐஎஸ்ஐ உறவை ஏற்க முடியாது: அமெரிக்கா கருத்து
First Published : 31 Jul 2010 01:59:16 AM IST
Last Updated :
வாஷிங்டன், ஜூலை 30: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தலிபான் தீவிரவாதிகளுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரி மைக் முல்லன் தெரிவித்தார். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஐஎஸ்ஐ அமைப்பில் உள்ள சிலர், தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். இதற்காக ஒட்டுமொத்தமாக ஐஎஸ்ஐ அமைப்பைக் குறைகூற முடியாது. ஐஎஸ்ஐ-க்கும், அமெரிக்க உளவு அமைப்புக்கும் இடையே ஆரோக்கியமான உறவு நீடிக்கிறது என்றார் அவர்.