காயப்படுத்துபவர்களை விரோதிகளாகக் கருத மாட்டேன்: முதல்வர் கருணாநிதி
First Published : 28 Jun 2009 06:07:09 PM IST
Last Updated :
சென்னை, ஜூன் 28: என்னைத் திட்டி என் மனதைக் காயப்படுத்துவபர்களை நான் என்றும் விரோதிகளாகக் கருத மாட்டேன் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி எழுதிய "சுருளிமலை' என்ற புத்தகம், "நீயின்றி நானில்லை' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதும் அவரே.இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னை ஏவி.எம்.ஸ்டுடியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கமல்ஹாசன் பேசும்போது நான் எழுதிய பல வசனங்களைப் படித்துதான் இன்றும் பலர் நடிப்புத்துறைக்கு வந்து புகழ்பெறுகிறார்கள் எனக் கூறினார். கமல்ஹாசனை இதே ஸ்டுடியோவில் சின்னஞ்சிறு பிள்ளையாக நடித்ததிலிருந்து நடிப்பில் பல அவதாரங்களை எடுத்து இன்று உலக திரைப்பட வியாபரச் சந்தையில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பது வரை நான் நன்கு அறிவேன். "தசாவதாரம்' படப்பிடிப்பின்போது அவர் ஏற்ற பெண் வேடத்தில் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார் கமல். மாடியில் எழுதிக்கொண்டிருந்த என்னிடம் என் உதவியாளர் என்னிடம் ""உங்களைத் தேடி ஒரு அம்மா வந்திருக்கிறார்'' என்றார். நானும் வரச்சொல்லி யார் என்று கேட்டேன். அப்போது "என்னைத் தெரியவில்லையா?' என கமல் கேட்டார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டில் உள்ளவர்கள் மாடிக்கு வந்து "யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு எனக்கு!கமல் கூறிய பிறகுதான் அடையாளம் தெரிந்தது. அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அதன் வாசனை கூட இன்னும் காயவில்லை. அந்த அளவுக்கு கலையின் மீது ஈடுபாடு கொண்ட கமல் போன்றவர்கள் என் எழுத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் மகிழ்ச்சி. "நீயின்றி நானில்லை' படம், பெண் உரிமை, மகளிர் மேம்பாடு ஆகியவற்றுக்காககப் போராடும் ஓர் இளைஞனைப் பற்றியது. அந்தப் போராட்டத்தில் ஏற்படுகிற சுழற்சிகளை நல்ல கதைக் களத்தில் சொல்வதுதான் கதை. இங்கு ஏவி.எம்.சரவணன், வி.சி.குகநாதன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் பேசியபோது சிலர் என்னைக் காயப்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினர். காயப்படுவதால் நான் வருத்தப்பட மாட்டேன். என்னைக் காயப்படுத்துபவர்களை நான் என்றும் விரோதிகளாகவும் கருத மாட்டேன். இன்றைக்குக் காயப்படுத்தியவர்கள் 10 நாள்கள் கழித்து மருந்து போட வருவார்கள். அப்போது அவர்களுக்கு விருந்து வைத்து வாழ்த்த வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இந்தப் படத்துக்குக் கிடைக்கும் ஊதியத்தையும் வழக்கம்போல நலிந்தவர்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளேன் என்றார்.