அரசுக் கல்லூரியாக மாறுமா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி?

First Published : 17 April 2012 10:33 AM IST

ஈரோடு: ஈரோட்டின் கல்விக் களஞ்சியமாக உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.

ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் 1954-ல், ஈரோடு, சத்தி சாலையில் உள்ள சூளையில் மகாஜன கல்லூரி என்ற பெயரில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் சிக்கய்ய நாயக்கர் மகாஜன கல்லூரி என்றும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்றும் பெயர் மாறியது.

52 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் இக்கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவராக பெரியார் பணியாற்றியுள்ளார். இப்போது இக்கல்லூரி கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை பாதுகாவலராகக் கொண்டு இயங்கி வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்விக் களஞ்சியமாக இக்கல்லூரி திகழ்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தான்.

இக்கல்லூரியின் நிர்வாகிகள் கல்லூரிக்கான அனுமதியை உயர்கல்வித் துறையிடம் புதுப்பிக்கத் தவறியதாலும், நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாலும், 19.12.2002 முதல், தமிழ்நாடு தனியார் ஒழுங்காற்றுச்சட்டம் 1976 பிரிவு 14ஏ-ன்படி கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் கட்டுப்பாட்டுக்கு கல்லூரி கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் வரையிலும் நிராகரிக்கப்பட்டது. இப்போதும் தொடர்ந்து கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில்தான் கல்லூரி இயங்கி வருகிறது. ஆனால், அரசுக் கல்லூரி எனறு இதை அறிவிக்காததால் பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கல்லூரியில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்குப் பதிலாக புதிதாக பணி நியமனம் செய்ய முடிவதில்லை. இதனால், மாணவ மாணவிகளின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது.

இங்கு 11 இளங்கலைப் படிப்புகள், 3 முதுகலைப் படிப்புகள் உள்ளன. இப்போது 1,500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கல்லூரியில் 400 புதிய மாணவ மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே இங்கு வசூலிக்கப்படுவதால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வேறு அரசு கலைக் கல்லூரிகள் இல்லை. எனவே, இக்கல்லூரியை இந்த ஆண்டிலாவது அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இப்போது, இது அரசு உதவி பெறும் கல்லூரியா, அரசுக் கல்லூரியா என்று கூறமுடியாதபடி திரிசங்கு நிலையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இக் கல்லூரியை அரசு கலைக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும். ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பு இது.

இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி கிளை செயலர் ப.கமலக்கண்ணன் கூறியது:  கல்லூரியில் மொத்தமுள்ள 83 ஆசிரியர் பணியிடங்களில் இப்போது 49 பேர் மட்டுமே உள்ளனர். இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற துறைகளில் அனுமதிக்கப்பட்டதைவிட பாதி எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மொத்தமுள்ள 52 அலுவலகப் பணியாளர் பணியிடங்களில் 23 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. ஏழை மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், கல்லூரிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துகள் பாதுகாக்கப்படும் என்றார்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.