கடல்சார் கல்விக்கு உதவித் தொகை மறுப்பு

First Published : 17 April 2012 10:29 AM IST

சென்னை: கடல்சார் கல்வி பயிலும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், கடல்சார் கல்வியைத் தொடர முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடல்சார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு உயர் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனத்தில் சேரும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும் என திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

2007-2008-ம் ஆண்டு மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருந்தது. இந்தத் திட்டம் தொடர்வதாக மீன்வளத் துறையின் ஒவ்வொரு மானியக் கோரிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை எந்தவொரு மாணவருக்கும் உதவித் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கைகளில் இந்தத் திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன. கடல்சார் கல்வி பயிலும் மீனவ இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்காக 2007-2008 நிதியாண்டில் அரசு உத்தரவு பெறப்பட்டு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நிதியாண்டுகளில் அரசின் சார்பில் எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

9 மாணவர்களுக்கும் இல்லை: சென்னை ராயபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக மீன்வளத் துறை கூறினாலும் பயனாளிகளுக்கு அது உரிய முறையில் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவரின் பெற்றோர் கூறியது: ""உதவித் தொகைக்கான உத்தரவுகள் அரசால் வழங்கப்பட்டும் அது கோப்பிலேயே தேங்கி இருப்பதாக மீன்வளத் துறை அலுவலகத்தில் கூறுகின்றனர். கடல்சார் கல்வியானது மூன்று ஆண்டுகள் பட்டப்  படிப்பாகும். ஒரு கல்வியாண்டுக்கு மட்டும் ரூ. 2 லட்சம் அளவுக்கு செலவாகிறது. அரசின் உதவித் தொகை திட்டத்தை நம்பியே மாணவர்களைச் சேர்த்தோம். ஆனால், இதுவரை ஒரு பைசாகூட வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என வேதனையுடன் தெரிவித்தனர்.

இடஒதுக்கீடு கிடைக்குமா? கடல்சார் கல்விக்கான உதவித் தொகையைப் பெற மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் மாணவரின் தந்தை உறுப்பினராக இருக்க வேண்டும். அப்படி உறுப்பினராக இருந்தும் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லையென பெற்றோர் புகார் கூறுகின்றனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த உதவித் தொகை திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு. பாரதி கூறுகையில், "மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடல்சார் கல்வி போன்ற உயர் படிப்புகளுக்கு வருவது அரிதான காரியம். இந்தச் சூழ்நிலையில், அவர்களின் கல்விக்கான உதவித் தொகையை உரிய காலத்தில் தர மறுப்பது வேதனை அளிக்கிறது. கடல்சார் கல்வி என்பது மீனவ சமுதாய மாணவர்களுக்கு அவசியமானது. எனவே, கடல்சார் கல்வியில் அவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்" என்றார்.

அதிகாரிகள் விளக்கம்: உதவித் தொகை பிரச்னை குறித்து, மீனவ இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, "மீனவர்கள் இயற்கையாக மரணம் நேர்ந்தாலோ அல்லது விபத்தில் இறந்தாலோ அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கையிலேயே தீவிரமாக ஈடுபடுகிறோம், உதவித் தொகை அளிப்பதற்கான கோப்புகளை விரைந்து பரிசீலிப்போம்" என்கின்றனர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.