சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் இரா.முத்துக்குமாரசாமி காலமானார்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் இரா.முத்துக்குமாரசாமி (80) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் இரா.முத்துக்குமாரசாமி காலமானார்
Updated on
1 min read

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் இரா.முத்துக்குமாரசாமி (80) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவருக்கு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயல் இயக்குநர் சுப்பையா உள்பட 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
பன்முகத் தன்மை கொண்டவர்: சென்னையைச் சேர்ந்த மறைந்த இராசகோபால் பிள்ளை-வள்ளியம்மாள் தம்பதியரின் புதல்வரான இரா.முத்துக்குமாரசாமி, பி.ஏ. மற்றும் நூலக அறிவியலில் பட்டம் பெற்றவர். கடந்த 1957 முதல் 1984-வரை சென்னை மறைமலை அடிகள் நூலகத்தில் நூலகராகப் பணியாற்றியவர். 1984-இல் தாமரை திரு வ.சுப்பையாபிள்ளை மறைவுக்குப் பின் சைவ சித்தாந்தக் கழக ஆட்சியாளராகப் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். திருக்குறள், சங்க இலக்கியம் பற்றிய கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் செந்தமிழ்ச் செல்வி இதழின் ஆசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
உலகத் தமிழ் மாநாடுகளில்... முன்னாள் முதல்வர் அண்ணா சென்னையில் நடத்திய 2-ஆவது உலக தமிழ் மாநாட்டில் நீதிபதி மகராசன் தலைமையில் அமைக்கப்பட்ட மலர் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் மதுரையில் நடைபெற்ற 5-ஆவது உலக தமிழ் மாநாட்டில் மாநாட்டுக் குழுச் செயலாளராகச்செயல்பட்டு அவரின் பாராட்டையும் பெற்றவர்.
நிரந்தர புத்தகக் கண்காட்சியை...தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவராக இவர் பணியாற்றியபோது நிரந்தர புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டு, அதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 2004-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் விருதை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து இவர் பெற்றார்.
50,000 நூல்களுக்கு மேல் படித்தவர்: சென்னை லிங்கு செட்டி தெருவில் சைவசித்தாந்தக் கழகத்தின் ஆதரவில் தொடங்கிய மறைமலை அடிகள் நூல் நிலையம் இன்றும் சிறப்புடன் இயங்கி வருகிறது. இவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது டாக்டர் மு.வரதராசன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தவர். அத்துடன், 6 நூல்களையும் படைத்ததோடு, ஆங்கிலத்தில் இருந்து இவர் மொழிபெயர்த்த 'கருமணி மலர்' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. பல நல்ல நூல்களை சைவ சித்தாந்த பதிப்புக் கழகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இன்று இறுதிச் சடங்கு: மறைந்த இரா.முத்துக்குமாரசாமியின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூர் மின் மியானத்தில் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 98846 84666, 044-24336802.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com