தோட்டக்கலைப் பயிர்களில் லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி
By
First Published : 12 April 2012 03:39 AM IST
சிதம்பரம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானே புயல் தாக்கி நெடுநாள் தோட்டக்கலை பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டாலும் விவசாயிகள் இழப்புகளில் இருந்து மீண்டுவந்து, மீண்டும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஒருசில ஆண்டுகளாவது ஆகும் நிலை உள்ளது.
இத்தகைய சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள், கிராமப்புற பண்ணை மகளிர், விவசாய தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட குறுகிய காலத்தில் விவசாய சாகுபடியில் அதிக வருமானம் பெற ஊடுபயிர் சாகுபடி ஒரு முக்கிய தேவையாக உருவாகிவிட்டது. மீண்டும் நீண்டகால தோட்டக்கலைப் பயிர்களான மா, பலா, கொய்யா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஈடுபட்டாலும் குறுகியகால பொருளாதார பயன்களே அவர்களது இழப்பீடுகள் மற்றும் பொருளாதார தேவைகளைச் சந்திக்க உதவியாக இருக்கும்.
தோட்டக்கலை பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீண் தெரிவித்தது: கடந்த பல வருட தோட்டக்கலை துறை ஆராய்ச்சியின் வாயிலாக ஜி.பி. பந்த் வேளாண் பல்கலைக்கழக விவசாயிகள், தோட்டக்கலைப் பயிருக்கு எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தாமலும், மாறாக தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கு பெரிதும் உதவும் சரியான ஊடுபயிர்களைக் கண்டுபிடித்து வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளன.
மாவுடன் சேர்ந்து பயிரிட சிறந்த ஊடுபயிர்கள் வெங்காயம், தக்காளி, பப்பாளி, கொய்யா மற்றும் காளிஃப்ளவர்; வாழையுடன் சேர்ந்து பயிரிட சிறந்த ஊடுபயிர்கள் கரணைகிழங்கு, வெள்ளரி, செவந்திபூ, அண்ணாமலை கத்திரி மற்றும் மிளகாய்; பலாவுடன் சேர்ந்து பயிரிட சிறந்த ஊடுபயிர்கள் அண்ணாமலை கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை மற்றும் பயிறு வகைகள்; கொய்யாவுடன் சேர்ந்து பயிரிட சிறந்த ஊடுபயிர்கள் தட்டப் பயிறு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் பயிறு வகைகள்; சப்போட்டாவுடன் சேர்ந்து பயிரிட சிறந்து ஊடுபயிர்கள் தட்டப்பயிறு, துவரை மற்றும் கொத்தவரை.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஊடுபயிர்களால் நீண்டகால பழப்பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. இவ்வகை ஊடுபயிர்கள் நீண்டகால பழப்பயிர்களைவிட உயரம் குறைவாகவும், நிலத்தில் மிக குறைந்த அளவில் மட்டுமே சத்துகளை எடுக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். மேலும் பல பயிறு வகை சார்ந்து ஊடு பயிர்களாக உள்ளதால் இயற்கையாக நிலத்துக்கு தழைச்சத்து கிடைக்கச் செய்துவிடும். மேலும் ஊடுபயிர்கள் நிலத்தை நன்றாக மூடிவிடுவதால் நிலத்தின் தண்ணீர் பிடிப்பு தன்மை, பயனுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருகவும், நிலத்தின் வெப்ப அளவு குறையவும் பெரிதும் உதவி செய்யும். மழைக்காலங்களில் மண்ணின் தன்மையை பாதுகாக்கவும் உதவிகரமாக இருக்கும்.
நீண்ட இடைவெளி கொண்ட தோட்டக்கலை பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி வாயிலாக விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன் பல ஊடுபயிர்கள் சாகுபடி வாயிலாக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகள் வெகுவாக குறைக்கவும், ஓரளவு வருமானம் பெறவும் உதவிகரமாக இருக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு ஊடுபயிர் சாகுபடியில் ஈடுபடும்போது தனிப்பயிர்போல் இல்லாமல் ஆண்டு முழுவதும் வருமானம் பெற வாய்ப்புள்ளது. எனவே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீண்டகால தோட்டக்கலைப் பயிர்கள் இடையே ஊடுபயிர்களை சாகுபடி செய்து அதிகளவு லாபம் பெறலாம் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீண்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
- ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு
- காரைக்கால் மீனவர்கள் இன்று தமிழகம் திரும்பினர்
- தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல்: சுமார் 500 பேர் கைது
- 20 அடிக்கும் குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
- வைகாசி விசாகம் : முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்
கருத்தை பதிவு செய்க