அமிதாப்பச்சனுக்கு தாதாசாகிப் பால்கே விருது!

மத்திய அரசு 1969-ஆம் ஆண்டு முதல் சினிமா உலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து  "தாதாசாகிப் பால்கே' பெயரில் விருது வழங்கி வருகிறது.
அமிதாப்பச்சனுக்கு தாதாசாகிப் பால்கே விருது!

மத்திய அரசு 1969-ஆம் ஆண்டு முதல் சினிமா உலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து  "தாதாசாகிப் பால்கே' பெயரில் விருது வழங்கி வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான பால்கே விருதுக்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  விருதாளரான அமிதாப் பச்சனைப் பற்றி பார்ப்போம்.

தந்தையின் பெயர் டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் - மிகச் சிறந்த பழம்பெரும் கவிஞர். தாயார் தேஜி பச்சன்.    அமிதாப்பிற்கு ஓர் இளைய சகோதரர் அஜிதாப்.  இருவருடைய ஆரம்பக் கல்வி  அலகாபாத்தில் முடிந்தது.

பின்பு நைனிடானில் உயர்கல்வியையும், டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரோரிமால் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் அமிதாப் முடித்தார். 

திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு அகில இந்திய வானொலியில் இந்தி மற்றும் ஆங்கிலச் செய்தி வாசிப்பாளராக வருவதற்கான குரல் தேர்வில், செய்தி வாசிப்பதற்கு ஏற்ற குரல் அமிதாப்பிடம் இல்லை என்று நிராகரிக்கப்படுகிறார். ஆனாலும் மனம் தளரவில்லை; முயற்சியையும் கைவிடவில்லை.

முயற்சியின் பலன் வங்காளப் பட இயக்குநர் மிருனாள் சென் இயக்கிய "புவன் ஷோம்' படத்தின் கதையை இந்தியில் சொல்லி  தன்னுடைய குரலை மட்டும் பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.  அகில இந்திய வானொலி நிராகரித்த குரலை மிருனாள் சென் பயன்படுத்திக் கொண்டார்.

இந்தித் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து மும்பையிலுள்ள அமிதாப்பின் தந்தையின் நண்பர் வீட்டில்   தங்கி முயற்சி செய்தார்.  

1969- இல் கே.ஏ.அப்பாஸ் தயாரித்து இயக்கிய "சாத் ஹிந்துஸ்தானிஸ்' படத்தில் ஏழு போராளிகளுள் ஒருவராக நடித்த அமிதாப்பிற்கு கதையில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இந்தியா 1947- இல் சுதந்திரம் பெற்றாலும், கோவா இந்தியாவில் இணைக்கப்படாமல் போர்த்துக்கீசிய நாட்டின்   பிடியில் இருந்தது. இந்தியாவுடன் இணைப்பதற்கான போராட்டத்தின் கதைதான் "சாத் ஹிந்துஸ்தானிஸ்'.  அமிதாப் நடித்த முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தொழில் முறை நடிகராக நடித்திருப்பார்.    சுமாராக ஓடிய படம் என்றாலும் அமிதாப்பச்சனுக்குத் திரைப்பட உலகில் நுழைவதற்கு நுழைவாயிலாக அமைந்தது. மேலும் முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.   

1971-ஆம் ஆண்டு வெளிவந்த "ஆனந்த்' படத்தில் கோபக்கார சிடுமூஞ்சியாகவும் அதே நேரத்தில் நேர்மையான  டாக்டர்  பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனும், கேன்சர் நோயாளியாக "ஆனந்த்' கதாபாத்திரத்தில்  ராஜேஷ் கன்னாவும் நடித்திருப்பார்கள்.   தமிழில் "நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தை 28 நாட்களில் எடுத்தது போல் "ஆனந்த்' படமும் 28 நாட்களில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது அமிதாப்பச்சனுக்குக் கிடைத்தது.  கொடுக்க முடியவில்லை. 

1972-ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் சிறிய கதாபாத்திரங்கள் உட்பட ஒன்பது படங்களில் நடித்திருந்தாலும்,  தமிழில் "மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தைத் தயாரித்த எஸ். ராமநாதன் இந்தியில் "பாம்பே டு கோவா' என்று இந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டார்.  துணை நடிகராகவும் கெளரவ நடிகராகவும் நடித்த அமிதாப்பச்சனுக்கு இப்படத்தில்தான் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திரையுலக வாழ்வில் இப்படம் திருப்புமுனையாக அமைந்தது, வசூலிலும் சக்கைப் போடு போட்டது.  இப்படத்தை இயக்கிய எஸ். ராமநாதன், இயக்குநர் பீம்சிங்கிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.  அமிதாப்பச்சன் இந்தித் திரை உலகில் வளர்வதற்கு தமிழ்த் திரை உலகத்தைச் சேர்ந்த இயக்குநர் எஸ். ராமநாதன், படத்தொகுப்பாளர் பால் துரைசிங்கம், பி. லெனின், கதாசிரியர் உசிலை சோமநாதன்  மற்றும் சண்டைப் பயிற்சியாளர் திருவாரூர் தாஸ் ஆகியோர் உதவியாக இருந்துள்ளார்கள் என்பதை நினைத்து தமிழ் திரையுலகம் பெருமை கொள்ள வேண்டும். பின்னாளில் நடிகர் கே. பாக்யராஜ் அமிதாப் நடிப்பில் "ஆக்ரி ரஸ்தா' படத்தை இயக்கினார். 

தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய "இரு கோடுகள்'  படத்தை இந்தியில் "ஜன்ஜோக்' என்ற பெயரில் 1972-ஆம் ஆண்டு ரீமேக் செய்து இயக்கினார், ஜெமினி நிறுவனத்தின் எஸ்.எஸ். பாலன். தமிழில் ஜெமினி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் மோகன் என்ற பெயரில் நடித்திருப்பார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. 

"தன்வீர்' படத்தில் விஜய்கண்ணா  என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திலும் இன்ஸ்பெக்டருக்கே உரித்தான கோபத்தை வெளிப்
படுத்தினார்.  கோபக்கார டாக்டராகவும், இன்ஸ்பெக்டராகவும் நடித்ததால் பாலிவுட்டில் அமிதாப்பச்சனுக்கு "கோபக்கார இளைஞன்' என்ற அடைமொழி புகழோடு சேர்ந்து கிடைத்தது. தொழில்ரீதியாக திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு கோபம் எனும் உடல்மொழி பெரிதும் துணை புரிந்தது. "ஜன்ஜீர்' படத்தின் மூலம் இந்தித் திரைப்பட உலகின் நட்சத்திர நடிகராக  மாறிய அமிதாப், இப்படத்தில் நடித்த ஜெயபாதுரியை  1973 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.   "ஹேரா பெரி' படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தார். 

1975-இல் "தீவார்',  "ஷோலே' மற்றும் "கபி கபி' படங்களும் 1977- இல் "அமர் அக்பர் அந்தோனி' படமும் அமிதாப்பச்சனுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.  1982 வரை வருடத்திற்கு 7 முதல் 8 படங்கள் வரை நடித்து வந்தார். 1982- இல் "கூலி' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூரு செயிண்ட் பிலோமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.    பிறகு மும்பை - ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாத கால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

ராஜீவ் காந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர் அமிதாப்பச்சன். அந்தவகையில் 1984 -ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால், போபர்ஸ் பீரங்கி பேர உழலில் அமிதாப் பெயரும் அடிபட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஐந்தாண்டு காலம் முழுமை செய்யாமல் 1987- இல் ராஜினாமா செய்தார். 

பிறகு அரசியல் பக்கமே செல்லாமல் நடிப்பதில் முழுக்கவனம் செலுத்திய அமிதாப் இன்று வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.  வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தன் முத்திரையைப் பதித்து "கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை (ஓர் எபிúஸாட் தவிர) 2000-ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து 19 ஆண்டுகளாக  வழங்கி வருகிறார். பன்முகத்தன்மை கொண்ட அமிதாப்பச்சன் இம்மாதம் 11-ஆம் தேதி எழுபத்தி ஆறாம்பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தவிர கலையுலக வாழ்க்கையிலும் 50 வருடங்களை முடித்துவிட்டார், இதனை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு தாதாசாகிப் பால்கே விருதிற்காக  அமிதாப் பச்சனைச் தேர்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com