திருக்குறள் இசை!

First Published : 26 August 2012 12:00 AM IST

லேசான மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை, கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்துகெண்டு, கசிந்தது.

 உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயது இளைஞர்.

 "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக்கொண்டிருக்கிறார்.

 பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். சுமார் ஒருமணி நேரக் கச்சேரியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார்.

 

 ""எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால், நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்துவிட்டிருக்கிறது'' என்று பணிவு, பக்தி, இசைநயம் ஆகியவற்றைக் கலந்து பேசத் தொடங்கினார். டொராண்டோவில் வசிக்கும் இவரது தம்பி கபிலன் சச்சிதானந்தம் மிருதங்கக் கலைஞர்.

 தனது அம்மா சுந்தரேஸ்வரி சச்சிதானந்தமே குரு என்று சொன்னார். அதன் பிறகு, வாய்ப்பாட்டை பூமா கிருஷ்ணனிடம் கற்றார். மிருதங்கத்தை திருவாரூர் பக்தவத்சலத்தின் சீடர் கெüரிசங்கர் பாலசந்திரனிடம் கற்றார்.

 அமுதீசர் முறையாக கர்நாடக இசையைக் கற்றிருந்தாலும் அரங்கேற்றம் எதுவும் நிகழ்த்தவில்லை. கனடாவில் பல இசை அமைப்புகளில் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். எட்டு வயது ஆனபோது, கனடா தெய்வீக இசை அரங்கம் என்ற அமைப்பின் சார்பில் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இசைக் கச்சேரியைத் தொடங்கியுள்ளார்.

 ""ஆனால், அதற்கு முன்பே ஒன்றரை வயதில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தேன்.'' என்றார் அமுதீசர். வாய்ப்பாட்டு, மிருதங்க இசை இரண்டும் கற்றிருக்கும் அமுதீசர் அதிகமாக வழங்குவது வாய்ப்பாட்டு இசைதான்.

 எட்டு வயதில் கச்சேரியில் இசை வழங்கத் தொடங்கி, இன்று வரையில் 150 மேடைகளில் தேன் குரலால் கர்நாடக இசையை வழங்கியிருக்கிறார். பெரும்பாலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தமிழ் அமைப்புகள், திருக்கோயில்கள், கலாசார அமைப்புகளின் மேடையில்தான்.

 ஆனால், மிகவும் பெருமிதமாகவும், கெüரவமாகவும் கருதுவது, க்ளீவ்லேண்ட் கச்சேரியில் பங்கேற்றதைத்தான். அமெரிக்காவில் உள்ள க்ளீவ்லேண்டில் ஆண்டுதோறும் தியாகையர் ஆராதனைக் கச்சேரி நடைபெறுவது வழக்கம். ""அங்கு 2011ம் ஆண்டு தியாகராஜர் ஆராதனையை ஒட்டி நடைபெற்ற இசைப் போட்டியில் பல்லவி பாடும் போட்டியிலும், மிருதங்க இசைப் போட்டியிலும் பரிசு பெற்றது எனக்கு நெகிழ்ச்சியான அனுபவம்'' என்கிறார் அமுதீசர். அங்கு, ராக மாலிகை போல "தாள மாலிகை' எனப்படும் இந்தப் போட்டியில் மூன்று வகையான தாளங்களைக் கலந்து இசைத்தார்.

 பிரபல கர்நாடக இசை மேதை திருச்சி சங்கரனும், ஹிக்கின்ஸ் பாகவதரும் அமெரிக்காவில் நிறுவிய பாரதி கலா மன்றத்தில் பாடியதையும் பெருமையுடன் குறிப்பிட்டார் அந்த இளைஞர்.

 இந்தியாவில் தில்லியைத் தவிர்த்து, பெங்களூர், சென்னை, திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று கர்நாடக இசைப் பயணம் மேற்கொள்ளும் அமுதீசர், ஸ்ரீரங்கத்தில் நாகஸ்வர இசை மேதை ஷேக் மெஹபூப் சுபானியிடம் நாகஸ்வர பாணி இசையைக் கற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்த இசையை இதுவரை "ஆன்லைன்' மூலம் கற்று வருகிறார் அமுதீசர்.

 அமுதீசர் பெருமைப்படுவது, ஆபேரி ராகத்தை கனடா நாட்டு மண்ணில் பரப்பியதை. ""2011ம் ஆண்டில், மார்க்ஹாம் சிட்டியில் உள்ள நான் பயிலும் ராண்டல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆபேரி ராகத்தில் இசைக் குறிப்புகளைத் தயாரித்து, ஆர்க்கெஸ்ட்ரா இசை வழங்கினேன்.

 அதில், சாக்ஸபோன், கிளாரினெட், டிரம்பெட் போன்று ஐந்து வகையான மேலைநாட்டு வாத்தியங்களைக் கொண்டு ஆபேரியை இசைத்தோம். அது ஒருவகையான ப்யூஷன் இசையாகும்'' என்று கண்கள் பளிச்சிடக் கூறினார். யோர்க் ரீஜனில் நடைபெற்ற இசைப் போட்டியில் பரிசு வென்ற இவருக்கு பக்க வாத்தியம் தம்பி கபிலன்தான். 

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.