மூலிகைக் குளியலை மறந்த பழங்குடியின மக்கள்!

First Published : 29 April 2012 12:00 AM IST

 கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது, அரசு விக்டோரியா கல்லூரி. அங்கே தமிழ் ஆசிரியையாக இருக்கிறார் த.கவிதா. படித்ததோ தமிழில் முதுகலை. ஆனால் அவர் முனைவர் பட்டத்துக்காகச் செய்த ஆய்வோ மலசர் பழங்குடியின மக்களைப் பற்றி. மலசர் பழங்குடியினர் வாழும் மலைப் பகுதிகளுக்குச் சென்று அவர்களுடன் பழகி, தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்திருக்கிறார் அவர்.

 தமிழ் படித்ததுக்கும், பழங்குடியினர் பற்றிய ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வியுடன் நின்ற நம்மிடம் அவர் பேசியதில் இருந்து...

 

 ""பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்பாறை அருகே உள்ள சிற்றூர்தான் என் சொந்த ஊர். அப்பா சிறு விவசாயி. எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி பெண் நான்தான். தமிழில் முதுகலை படித்தேன். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக மலசர் பழங்குடிகளைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தேன். அதற்குக் காரணம், எனது உறவினர்கள் பலரின் வீடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதுதான். அங்கு விவசாய வேலைகள் செய்வதற்காக மலசர் பழங்குடி மக்கள் வருவார்கள். அவர்களைப் பற்றி என் உறவினர்களும், அம்மாவும் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இயல்பாகவே அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஏற்பட்டது.

 அதைவிட முக்கியம், பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற பல செய்திகள், மலசர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் இப்போதும் நடைமுறையில் இருப்பதுதான்.

 உதாரணமாக, சங்க இலக்கியமான மலைபடு கடாமில் "புல்வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவீர்' என்று ஒரு வரி வருகிறது. அதாவது வீட்டின் கூரையில் புற்களைக் கொண்டு வேய்ந்து இருப்பதாக "மலைபடு கடாம்' கூறுகிறது. இன்றும் மலசர் பழங்குடியினரின் குடிசைகள் நீளம் நீளமாக உள்ள தைலப்புல் கொண்டே வேயப்படுகின்றன.

 நற்றிணையில் பழந்தமிழர் உணவாக உடும்பு, தவளை, முயல் போன்றவை கூறப்படுகின்றன. இன்றும் மலசர் பழங்குடியினரின் உணவும் இவையே.

 மலசர் பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் இடத்தைப் பதி என்று கூறுகிறார்கள். சங்க இலக்கியங்களிலும் வாழும் இடத்தைப் பதியென்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 ஒருவரிடம் கைமாற்றாகப் பணம் வாங்குவதை மலசர் பழங்குடியின மக்கள் "குறியாப்பு' என்கிறார்கள். சங்க இலக்கியங்களில் இது குறியெதிர்ப்பு என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சங்க இலக்கியங்களில் "கலம் தொடா மகளிர்' பற்றி வருகிறது. மாதவிலக்கு வரும் நாட்களில் பெண்கள் எந்த சமையல் வேலையும் செய்யாமல், எந்தக் கலத்தையும் (பாத்திரத்தையும்) தொடாமல் இருந்திருக்கிறார்கள். மலசர் பழங்குடியினர் மத்தியில் அந்தப் பழக்கம் இன்றும் உள்ளது. வீட்டுக்கு வெளியே உள்ள ஓர் இடத்தில் மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தங்க வைக்கப்படுகின்றனர். ஐந்தாறு நாட்கள் சட்டி, பானைகளை அவர்கள் தொடக் கூடாது.

 மலைபடு கடாமில் தேன் எடுக்கும் நிகழ்வு பற்றிய பாடல் ஒன்று உள்ளது. அந்த முறைப்படிதான் மலசர் பழங்குடி இன மக்கள் இன்றும் தேன் எடுக்கிறார்கள். அதாவது, மலைப் பகுதிகளில் உயரமான இடங்களில் தேனடை இருந்தால், அதிலிருந்து தேன் எடுப்பது சிரமம். நீளமான கணுவுள்ள மூங்கிலை மரத்தில் சாத்தி வைத்து, அந்தத் கணுக்களில் கால் வைத்து ஏறுவார் ஒருவர். கீழே நிற்கும் ஒருவர் அதைப் போன்ற இன்னொரு மூங்கிலைத் தருவார். அந்த மூங்கிலை வாங்கி, ஏற்கெனவே உள்ள மூங்கிலுடன் காட்டுக் கொடிகளை வைத்துச் சேர்த்துக் கட்டுவார். பின்பு கட்டப்பட்ட அந்த மூங்கிலின் உதவியுடன் தேனடையை நெருங்கிச் சென்று தேன் எடுப்பார். இது சங்க காலத்தில் தேன் எடுத்த முறையைப் போலவே அப்படியே உள்ளது.

 அப்படித் தேன் எடுக்கப் போகும்போது, அண்ணன், தம்பிகள் ஒன்றாகத் தேன் எடுக்கப் போகமாட்டார்கள். மாமன், மச்சினனுடன்தான் போவார்கள். அண்ணன் மனைவி, தம்பி மனைவி மீது ஈர்ப்பு இருந்தால், அண்ணன் தம்பிகளில் யாராவது ஒருவர் தேன் எடுக்கும்போது இன்னொருவருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். மாமன், மச்சினன் சகோதரியின் கணவனுக்கு ஆபத்தை ஏற்படுத்தமாட்டார்கள் என்பதால் மாமன், மச்சினனுடன்தான் தேன் எடுக்கப் போவார்கள்.

 மலசர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, சங்க கால மக்களின் வாழ்க்கையைப் போல பலவிதங்களில் ஒத்துப் போகிறது.

 மலசர் பழங்குடியின மக்களின் திருமணங்களில் 50 ஆண்டுகள் முன்பு வரை தாலி கட்டும் வழக்கம் இல்லை. தாலி வாங்கப் போன ஒருவர் திரும்பி வரவில்லை; அதனால் தாலி கட்டும் வழக்கம் இல்லாமற் போய்விட்டது என்கிறார்கள். இப்போது கால் பவுன், அரைப் பவுனில் தாலி வாங்குகிறார்கள். அதைக் கூட வாங்கும் வசதியில்லாதவர்கள், பித்தளை வட்டு ஒன்றை வாங்கி அதில் துளையிட்டுத் தாலியாக அணிகிறார்கள். வரதட்சணை பழக்கம் அவர்களிடம் இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பரிசம் போட்டு பெண்ணை மணம் முடித்துக் கொள்கிறார்கள்.

 மலையடிவாரங்களின் அருகே உறவினர்கள், நண்பர்கள் வீடு இருந்ததால், ஆய்வுப் பணிக்கு வசதியாக இருந்தது. ஆனாலும் மலைக்கு மேல் 9 கி.மீ.வரை நடந்துதான் போக வேண்டியிருந்தது. கரடு முரடான பாதை. பாலக்காடு மாவட்டத்தில் தேக்கடி என்ற ஒரு சிறிய பகுதி உள்ளது. அங்கே போவதற்கு ஜீப்பில்தான் போக முடியும். பல மணி நேரங்கள் ஜீப்புக்காகக் காத்திருந்து அங்கே போனேன். என்னை அங்கிருந்த மலசர் பழங்குடியின மக்கள் வினோதமாகப் பார்த்தார்கள். அவர்கள் தமிழில் நன்றாகப் பேசுவதால் மொழிப் பிரச்னை இல்லை.

 ஆனால் அவர்களுடைய தாய் மொழி, தமிழும் மலையாளமும் கலந்ததாக உள்ளது. அவர்களுக்குள் பேசிக் கொள்ளும்போது தாய்மொழியில் பேசிக் கொள்கிறார்கள்.

 மலசர் இனப் பெண்கள் ஆரம்பத்தில் பேசுவதற்குச் சிறிது தயங்கினாலும், பின்னர் நன்றாகப் பழக ஆரம்பித்தார்கள். அவர்களைப் பாடச் சொல்லி டேப்பில் பதிவு செய்தேன். சில நேரங்களில் எழுதிக் கொண்டேன்.

 நகர்ப்புறங்களில் உள்ளதைப் போலவே தொலைக்காட்சியின் தாக்கம் அங்கேயும் உள்ளது. குறிப்பாக அதில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, மூலிகைக் குளியலை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஷாம்பு, சோப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

 மலசர் பழங்குடியின மக்களைப் போல இந்த மலைப் பகுதியில் உள்ள பிற பழங்குடி இன மக்களான காடர்கள், தளியர்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது'' என்றார்.

 

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.