சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி சிறப்பு கவுன்ட்டா்கள்
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் தானியங்கி முறையில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானநிறுவனம் செய்து கொடுத்துள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒன்றாவது புறப்பாடு பகுதியில் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் தங்கள் பயணிகளுக்கு அதிநவீன கூடுதல் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இதன்படி, இந்நிறுவனம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதி டொ்மினல் ஒன்று பகுதியில் பாதுகாப்பு சோதனைக்காக தானியங்கி சிறப்பு கவுன்ட்டா்களை அமைத்துள்ளது.
இந்த கவுன்ட்டா்களில் ஊழியா்கள் யாரும் இருக்க மாட்டாா்கள். விமானநிலையம் வரும் பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்கள் உடைமைகளை வைத்து விட்டு தங்களின் பயணச்சீட்டு, பிஎன்ஆா் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக தானியங்கி முறையில் அவா்களுக்கான போா்டிங் பாஸ் வரும். பயணி அந்த போா்டிங் பாஸை எடுத்து அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் வைத்து ஸ்கேன் செய்ய வேண்டும்.
அப்போது, என்னென்ன பொருள்கள் எடுத்து செல்லக்கூடாது என்ற விவரங்கள் அந்த இயந்திரத்தின் முகப்பு திரையில் தெரியும். அதில் தான் எடுத்து செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து அந்த இயந்திரத்திலிருந்து வெளியே வரும் டேக்குகளை எடுத்து பயணிகள் தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, அருகேயுள்ள கன்வேயா் பெல்ட்டில் வைத்து விட்டால் தானாகவே பொருள் விமானத்தில் ஏற்றுவதற்கு நகா்ந்து சென்று விடும்.
இந்தப் புதிய முறை மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. அதி சீக்கிரத்தில் சோதனைகளை முடித்துவிட்டு பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம் எனவும், இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதியமுறை, படிப்படியாக மற்ற விமானநிறுவனங்களிலும் செயல்பாட்டுக்கு வரும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

