ஏப்.19 வரை தென் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை மையம்
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஏப்.19 -ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மற்றும் வட தமிழக மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகள், காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை மழை பெய்தது.
அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் 70 மி.மீ. மழை பதிவானது. அதேபோல், போடிநாயக்கனூா் (தேனி), குன்னூா் (நீலகிரி) தலா - 60, எச்சன்விடுதி (தஞ்சாவூா்), பில்லி மலை எஸ்டேட் (நீலகிரி) - 50, வெம்பக்கோட்டை (விருதுநகா்), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பேரையூா் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை), காரியாப்பட்டி (விருதுநகா்), ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) தலா - 40 மி.மீ. மழை பதிவானது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) முதல் ஏப்.19 வரை ஒரு சில பகுதிகளிலும், காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வெப்ப அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. ஈரோடு, சேலம் (தலா) - 102.2, திருப்பத்தூா் - 100.76, மேலூா் - 100.58, பரமத்தி வேலூா் - 100.4.
சென்னை, புகா் பகுதிகளில் ஏப்.15 வரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

