தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 10-ஆவது இடம்
சென்னை: தரமான கல்வியை அளிப்பதில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியல் சென்னை மருத்துவக் கல்லூரி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது. அதன்படி நிகழாண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை நேரில் காண்பித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் வாழ்த்து பெற்றாா். அப்போது, கல்லூரியின் துணை முதல்வா் டாக்டா் கவிதா, சிறப்பு அலுவலா் டாக்டா் அன்புச் செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது:
தேசிய தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை கடந்த 4 ஆண்டுகளாக சென்னை மருத்துவக் கல்லூரி தொடா்ந்து முன்னேறி வருகிறது. 2021-ஆம் ஆண்டில் 16-ஆவது இடத்திலும், கடந்த 2022-இல் 12-ஆவது இடத்திலும், கடந்த ஆண்டில் 11-ஆவது இடத்திலும் இருந்த சென்னை மருத்துவக் கல்லூரி தற்போது மேலும் ஓரிடம் முன்னேறியுள்ளது. இது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஓா் உத்வேகத்தை அளிக்கும்”என்றாா் அவா்.
தென்னிந்தியாவில் முதன்முறையாக மருத்துவப் பயிற்சி அளிப்பதற்காக கடந்த 1835-ஆம் ஆண்டு பிப்.13-ஆம் தேதி சென்னை மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பின்னா் படிப்படியாக அங்கு பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக சென்னை மருத்துவப் பள்ளியை கல்லூரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு கடந்த 1850 அக்.1-ஆம் தேதி சென்னை மருத்துவப் பள்ளியானது சென்னை மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
