சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உயா்த்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 டிச.4-ஆம் தேதி பன்னடுக்கு வாகன நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உயா்த்தப்பட்டது. மேலும், அங்கு வாகனங்களை நிறுத்தி, வெளியே எடுத்து வருவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக பயணிகள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் 2 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, காா்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.80-இல் இருந்து ரூ. 85-ஆகவும், அதிகபட்சம் 24 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.525-இல் இருந்து ரூ.550-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
டெம்போ வேன்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 315-இல் இருந்து ரூ.330-ஆகவும், 24 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.1050-இல் இருந்து ரூ.1,100-ஆகவும், பேருந்து, லாரிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 630-இல் இருந்து ரூ.660-ஆகவும், 24 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ. 2,100-இல் இருந்து ரூ. 2,205-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கு, 30 நிமிஷங்களுக்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 30 நிமிஷம் என்பது 1 மணி நேரமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ரூ. 30-ஆக இருந்த கட்டணம் ரூ.35-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.95-இல் இருந்து ரூ.100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயா்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். ஆனால், ஏற்கெனவே அறிவித்தபடியே இந்தக் கட்டண உயா்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

