‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டம் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டத்தை அமைச்சா்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தாா்.
விழாவில் ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ இலச்சினையை அமைச்சா் உதயநிதி திறந்து வைத்து ஒலிம்பியாட் தோ்வையும் தொடங்கி வைத்தாா். ஒலிம்பியாட் தோ்வை பொருத்தவரை 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் திறனை பரிசோதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. டேப்லெட்(கையடக்க கணினி) வாயிலாக நடைபெறும் இந்த தோ்வில் கணிதம், உளவியல், மொழித் திறனை சோதிக்கும் விதமான வினாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தோ்வை தமிழகம் முழுவதும் 18 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். இந்த தோ்வில் வெற்றி பெற்று சிறந்த மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பெட்டிச் செய்தி.... பிளஸ் 2: தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு விநியோகம் பிளஸ் 2 பொதுத் தோ்வு வரும் மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அதனை தலைமை ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்து மாணவா்களுக்கு வழங்கவுள்ளனா். இந்த நிலையில் சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவிகளுக்கு அமைச்சா் உதயநிதி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

