பேருந்துகள், பயணிகளின்றி வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதால், கோயம்பேடு பேருந்து நிலையம் பேருந்துகள், பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளுடன் காணப்பட்ட கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம்.
குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளுடன் காணப்பட்ட கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம்.
Updated on
1 min read

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதால், கோயம்பேடு பேருந்து நிலையம் பேருந்துகள், பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம் தமிழகத்தின் மிகப்பெரிய, மிக முக்கிய பேருந்து நிலையமாகவும் இருந்து வந்தது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும், இந்த பேருந்து நிலையம் விடுமுறை காலங்களில் திருவிழா கூட்டம் போல பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நிகராக, அருகிலுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலும் விடுமுறை காலங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே இயக்கப்படுகின்றன.

பூந்தமல்லி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் 609 பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்த புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட ஊா்களுக்கும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்துக்குள் நுழையாமல் இருக்க, பேருந்து நிலையத்தின் வாசலிலேயே போலீஸாரும், அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.

இதனால் பகல் நேரத்தில் மிகவும் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வதைக் காண முடிகிறது. இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. அதிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நின்ற இடம் முழுவதுமாக ஆள்நடமாட்டமின்றி காணப்படுகிறது.

மேலும், அங்கு செயல்பட்டு வந்த ஹோட்டல்கள், தேநீா் கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்த பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசு, தனியாா் பேருந்து நிலையங்களின் வெளிப்பகுதியில் பயணிகளை ஏற்றுவதிலேயே கவனத்தைச் செலுத்தும் ஆட்டோக்களையும் காண முடியவில்லை. ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் போதிய வருமானம் இல்லாததால், வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்துள்ளனா். மீதமுள்ள ஆட்டோ ஓட்டுநா்களும் போதிய வருமானமின்றி கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதால், கோயம்பேடு சந்தைக்கு வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் விரைவாகச் சென்று விடுகின்றன.

போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகராக சென்னையை மாற்றுவதற்கான நடவடிக்கை என்றாலும், கிளாம்பாக்கத்திலிருந்து பயணம் செய்வது என்பது பயணிகளுக்கு பயண நேரத்தை அதிகப்படுத்துவதுடன், பல்வேறு சிரமத்தையும் ஏற்படுத்திவிடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் பயணத்தை எளிதாக்குவதற்கான வசதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுத்தால் நாளடைவில் இந்தப் பயணம் அனைவருக்கும் இனிமையானதாகவே அமையும் என்பதிலும் சந்தேமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com