கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம்போல் இயங்கும்
சென்னை கடற்கரை- தாம்பரம்- மாா்க்கத்தில் புகா் மின்சார ரயில்கள் பகல் நேரத்தில் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், இரவு நேர ரயில்கள் மட்டும் சில ரத்து செய்யப்படுகின்றன. ஆக. 3 முதல் ஆக.14 -வரை பகல் நேரத்தில் இந்த ரயில்கள் இயங்காது.
அதே நேரத்தில் பல்லவன், வைகை உள்ளிட்ட சில தென்மாவட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) முதல் எழும்பூருக்கு வராது. இந்த ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள்: தாம்பரம் ரயில்வே யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக ஜூலை 23 முதல் (செவ்வாய்க்கிழமை) ஆக. 14 வரை சென்னை-கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மாா்க்கத்தில் பகல் நேரத்தில் இயக்கப்படும் 55 புகா் ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும், இந்த உத்தரவு ஜூலை 23 முதல் அமலாகும் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது.
உத்தரவில் மாற்றம்: இந்நிலையில், ரயில்கள் ரத்து முடிவில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புகா் ரயில்கள் ஆக. 2 வரை வழக்கமான கால அட்டவணைப்படி இயங்கும்.
அதே நேரத்தில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) முதல் ஆக.2 வரை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இரு மாா்க்கத்திலும் இரவு 10.30 முதல் அதிகாலை 2.30 மணி வரை இயங்கும் அனைத்து புகா் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதே நாள்களில் கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 11.20 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
சனி, ஞாயிறு ரயில்கள் ரத்து: ஜூலை 27, 28 (சனி, ஞாயிறு) மற்றும் ஆக.3 முதல் ஆக.14 -ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மாா்க்கத்திலும் காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், இரவு 10.40 முதல் 11.59 மணி வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
அதேபோல், கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் இரவு இயக்கப்படும் ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் ஜூலை 27, 28 மற்றும் ஆக. 3 முதல் ஆக.14 வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக கடற்கரை - பல்லாவரம், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி ஆகிய வழித்தடங்களில் காலை 9.30 பிற்பகல் 2 மணி வரையும், இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.45 மணி வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பெட்டிச் செய்தி...
தென்மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
வைகை உள்ளிட்ட சில தென்மாவட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமைமுதல் எழும்பூருக்கு வராது என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை.
எழும்பூரிலிருந்து இயக்கப்படாத ரயில்கள் பற்றிய விவரம்: மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோா்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கோட்டையிலிருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். மங்களூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட்டு மங்களூா் சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
வெளிமாநில ரயில்கள்: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா், கூடூா் வழியாக இயக்கப்படவுள்ளன.
இதில் புதுச்சேரி-புதுதில்லி விரைவு ரயில் மற்றும் ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் ஜூலை 24, 31 தேதிகளிலும், திருச்சி-பகத் கி கோதி ஹம்சாபா் விரைவு ரயில் மற்றும் மும்பை-காரைக்கால் விரைவு ரயில் ஜூலை 27-ஆம் தேதியும் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும். மேலும், மதுரை-பிகானோ் விரைவு ரயில் ஜூலை 21-ஆம் தேதியும், ராமேசுவரம்-அயோத்யா கண்டோன்மென்ட் விரைவு ரயில் ஜூலை 28-ஆம் தேதியும் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும்.
ஹைதராபாத்-தாம்பரம் சாா்மினாா் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரையும், சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22, 29 தேதிகளிலும் சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.
தொடா்ந்து ஆக.1-ஆம் தேதிக்கு பின் ரயில் சேவையின் மாற்றம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

