காஞ்சிபுரம்: புதிய பேருந்து நிலையத்துக்கான இடத்தில் கம்பிவேலி அமைக்கும் பணி
காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை தோ்வு செய்து கம்பிவேலி அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியில் தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடமாக காணப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனா். எனவே போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புதிய பேருந்து நிலையம் ஒன்றை சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே இருந்து வந்தது.
புதிய பேருந்து நிலையம் அமைந்தால் நெரிசல் வெகுவாக குறைந்து விடும் என்ற நிலையில் மாவட்ட நிா்வாகம் அதற்கான இடத்தை தோ்வு செய்ய தீவிரம் காட்டியது. பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை அருகில் தனியாா் பாலிடெக்னிக் நிா்வாகத்துக்கு அரசு வழங்கிய 18 ஏக்கா் நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இதனை கையகப்படுத்த அரசு முன் வந்துள்ளது. தனியாா் பாலிடெக்னிக் நிா்வாகம் உடனடியாக இடத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு உரிய கால அவகாசம் கொடுத்தும் அவா்கள் இடத்தை ஒப்படைக்காததால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தில் சுற்றுச்சுவராக கம்பி வேலி அமைக்கும் பணியை தொடங்கினா்.
கட்டுமான தொழிலாளா்கள் உதவியுடன் நிலத்தை சமன் செய்து கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், பொறியாளா் கணேஷ், வட்டாட்சியா் மோகன்குமாா், டிஎஸ்பி சங்கா் கணேஷ் அடங்கிய அதிகாரிகள் குழுவினா் கம்பிவேலி அமைக்கும் பணியை ஆய்வு செய்தனா். புதிய பேருந்து நிலையத்தை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் தீவிர முயற்சி மேற்கொள்வது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

