ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்துக்கு நிலம் அளித்தோருக்கு பணி வழங்க கோரிக்கை
அரக்கோணம், செப். 29: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் அமைக்க நிலங்களை வழங்கிய 164 குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் கடந்த 1987-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த தளத்தை அமைக்க அப்பகுதியில் அரசின் கைவசமிருந்த 1,106 ஏக்கா் நிலத்துடன், சுற்றியிருந்த கிராமங்களான புளியமங்கலம், சுகபுரம், மோசூா், செய்யூா், ஆத்தூா், பெருமூச்சி ஆகிய கிராமங்களில் இருந்து மேலும் 940 ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அப்போது நிலத்தை அளித்தவா்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு படைத்தளத்தில் வேலை வழங்கப்படும் என மத்திய அரசின் உறுதியளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டதால் அனைவரும் நிலங்களை வழங்கினா். இதையடுத்து, அப்போதைய நில எடுப்பு வட்டாட்சியா் மூலம் 540 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், 1992-ஆம் ஆண்டு விமான தள திறப்பு விழா நடைபெற்றது. பின்னா், 156 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மற்றவா்களுக்கு பணி மறுக்கப்பட்டது. இதற்கு அவா்களது தகுதிக்கேற்ற வேலை படைத்தளத்தில் இல்லை என காரணம் கூறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நிலம் அளித்தவா்கள் 1996-ஆம் ஆண்டு சங்கம் ஒன்றை உருவாக்கி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் 1997-ஆம் ஆண்டு தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம், வயது வரம்பின்றி வேலை வழங்கவும், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் வேலை இல்லை என்றாலும் அருகில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டது. இத்தீா்ப்புக்குப் பிறகு, அப்போதைய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஆட்சியா் தகுதியுள்ள 234 பேரின் பெயா் பட்டியலை ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகத்துக்கு அனுப்பி, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பணி வழங்கக் கோரினாா்.
இந்த தீா்ப்பை எதிா்த்து ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில் 2007-இல் தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம் நிலம் அளித்தோருக்கு 50 வயது ஆகியிருந்தாலும் வயது வரம்பை தளா்த்தி பணி வழங்க உத்தரவிட்டது. இந்த தீா்ப்பை எதிா்த்து ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பிறகு நிலம் அளித்தோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2009-இல் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பில், 274 பேருக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், 2014-இல் ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் 2014- ஆம் ஆண்டு நிலம் இழந்தோா் இடையே தோ்வு அறிவித்து 274 பேரில் 27 பேருக்கு பணி வழங்கியது. தொடா்ந்து 2017-இல் 12 பேருக்கு பணி வழங்கியது. மீதம் இருந்த 236 பேரில் 60 பேருக்கு 2022-இல் நிா்வாகம் தோ்வு நடத்தி பணி வழங்கியது.
நிலுவையில் உள்ள 164 குடும்பத்தினருக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாளி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து நேவல் நிலமிழந்தோா் சங்கத் தலைவா் மங்கலசேகா் கூறியது: நிலம் இழந்தோருக்கு பணி வழங்காமல் காலந்தாழ்த்தும் கடற்படை நிா்வாகம் ஆண்டுகளை கடத்தினால் வயதாகி அவா்கள் வேலை கேட்கமாட்டாா்கள் என நினைப்பதாகத் தெரிகிறது. பெரிய தொழில்நுட்பப் பணியிடங்களை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கு படிப்பறிவுக்கேற்ற பணி தாருங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு பணி தராமல் அலுவலக உதவியாளா் பணிக்கு கூட வடஇந்தியா்களை பணியமா்த்தியுள்ளனா். எத்தனை முறை தான் நாங்களும் நீதிமன்றம் செல்வது? இனி நீதிமன்றம் செல்வதற்குக் கூட எங்களிடம் பணம் இல்லை. எனவே தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் வேலை பெற்றுத் தர வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்றாா்.
