காஞ்சிபுரம்-ஆரணி ரோடு, வாலாஜா-திண்டிவனம் புதிய ரயில் பாதை: பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழியாக காஞ்சிபுரம்-ஆரணி ரோடு, வாலாஜா-ஆற்காடு-செய்யாறு- திண்டிவனம் இடையே புதிய ரயில் பாதை அமைத்து உதவிட வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை. இங்குள்ள 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், பிரபலமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்பகுதியில் உற்பத்தியை தொடங்க உள்ளது. அதேபோல, மகேந்திராவின் வாகன சோதனை ஓட்ட மையமும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
செய்யாற்றில் சாா் -ஆட்சியா் அலுவலகம் உள்பட 155- க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.
புதிய ரயில் பாதைகள் காஞ்சிபரம்-செய்யாறு-ஆரணி ரோடு இடையே புதிய ரயில் பாதை:
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும், ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் செய்யாறு நகரம் அமைந்துள்ளது.
பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு வழியாக ஆரணி ரோடு வரை புதிதாக ரயில் பாதை அமைத்தால் ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கும், சென்னைக்கும் நேரடி ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்.
வாலாஜா-ஆற்காடு-செய்யாறு-திண்டிவனம் இடையே புதிய ரயில் பாதை:
செய்யாறு வழியாக திண்டிவனம்-நகரி இடைபே புதிதாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதல்கட்டமாக வாலாஜா-ஆற்காடு-செய்யாறு-வந்தவாசி-திண்டிவனம் இடையே புதிய ரயில் பாதை உடனடியாக அமைக்கப்பட்டால், தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், அரக்கோணத்தில் இருந்தும், காட்பாடியில் இருந்தும் தொலைதூர ரயில்களை நேரடியாக இயக்க முடியும்.
காஞ்சிபுரம்-திண்டிவனத்துக்கு ரயில் பாதை
செய்யாற்றில் இருந்து வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்ட நிலையில், செய்யாற்றில் இருந்து 30
கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்துக்கு அமைத்தால் அங்கிருந்து வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு ரயில் பாதை வசதி எளிதாக கிடைக்கும்.
மேலும், காஞ்சிபுரம்-செய்யாறு-வந்தவாசி-திண்டிவனம் நேரடி ரயில் பாதை வசதி கிடைக்கும்
செய்யாறு சிப்காட் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை நேரடியாக ரயில் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம், திண்டிவனம் வழியாக வரும் சரக்கு ரயில்களை நேரடியாக காட்பாடி, அரக்கோணம் வழியாக வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

