அரக்கோணம் அருகே புதிய ரயில் நிலையம்: முதல்கட்ட பணிகள் தொடக்கம்
அரக்கோணம்-திருத்தணி ரயில் நிலையங்களுக்கு இடையே அரக்கோணம் அருகே புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த பல காலமாக அரக்கோணம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் அரக்கோணம்-தக்கோலம் இடையே உள்ள ரயில் பாதை மின்மயமாக்கப்படாமல் இருந்தது. அதிலிருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டதை அடுத்து தற்போது மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, அப்பாதை மேல்பாக்கம் ரயில் நிலையம் வழியாக அரக்கோணத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், அப்பாதையில் ரயில் என்ஜின் வெள்ளோட்டம் அண்மையில் நடைபெற்றது.
வெள்ளோட்டத்தின் போது, பல இடங்களில் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தீர்க்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், கல்லாற்றுக்கு முன் பொய்ப்பாக்கம் கிராமம் அருகே சிறிய பாலத்தின் கட்டுமானப் பணிகளும் நிறைவடையாமல் உள்ளன. இதற்கிடையில் பருத்திபுத்தூர், பொய்ப்பாக்கம் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கடவுப்பாதைகளில் (லெவல் கிராசிங்) கேட்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளன. இப்பணிகளைத் தொடர்ந்து, வரும் வாரங்களில் இப்பாதை மின்மயமாக்கப்படும் பணிகளும் துரிதகதியில் நடைபெற உள்ளன.
இப்பணிகள் முழுவதும் முடிவடைந்து ரயில்களின் இயக்கம் தக்கோலத்தில் இருந்து மேல்பாக்கம் வழியே நடைபெற்றாலும், தற்போது நடைமுறையில் இருக்கும் பெருமூச்சி வழிப்பாதையும் போக்குவரத்திலேயே இருக்கும் எனவும் ரயில்வே அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அவசரகால போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில்களை நிறுத்தி வைக்க இப்பாதை பயன்படும் எனவும், எதிர்காலத்தில் இப்பாதைக்கு ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகம் மின்மயமாக்க அனுமதி அளித்தால், அரக்கோணம்-தக்கோலம் இடையே இரட்டை ரயில் வழிப் பாதையாக பராமரிக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ரயில்கள் இயக்கப்படாத நிலையில் எஸ்.ஆர்.கேட் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது தக்கோலம், மேல்பாக்கம் வழியே ரயில்கள் இயக்கப்படும் நிலையில் அரக்கோணம் வழியே மும்பை-நாகர்கோவில், குர்லா-மதுரை விரைவு ரயில்கள், திருப்பதி-புதுச்சேரி சாதாரண ரயில்கள் ஆகியவற்றை திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்துக்குள் வராமலேயே தக்கோலம் செல்லவும் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மேல்பாக்கத்தில் புறவழி ரயில் குறுக்கு பாதை அமைக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில்களில் வரும் அரக்கோணம் பயணிகளின் வசதிக்காக அரக்கோணம் வடக்கு கேபின் அருகே, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் பின்புறம் ஒரு புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளிட்டவை குறித்து தெற்கு ரயில்வே தலைமையகத்தில் இருந்து வந்த உத்தரவுக்குப் பிறகு அரக்கோணம் ரயில் நிலைய அலுவலர்கள் தனியாக திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளனர்.
இந்தத் திட்ட அறிக்கையில் இந்த ரயில் நிலையத்துக்கு வைக்கப்பட வேண்டிய பெயர் குறித்த இரு வேறு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஒரு அறிக்கையில், இப்பகுதி அமைந்திருக்கும் ஊராட்சியின் பெயரான வடமாம்பாக்கம் ரயில் நிலையம் என்ற பெயரை வைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இப்பகுதியில் இருக்கும் ஊராட்சிகளிலேயே இது பெரிய ஊராட்சி எனவும் குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், நிலைய இயங்குதளங்கள், நடைமேடை நீளங்கள், ரயில் நிலைய அணுகுச் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே தலைமையகத்தில் இருந்து வந்த உத்தரவுக்குப் பிறகு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
நீண்ட தூர ரயில்கள் அரக்கோணம் சந்திப்பு நிலையத்துக்குள் வராமல் செல்லும் பட்சத்தில் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கும், தற்போது அமையவுள்ள ரயில் நிலையம் வழியே பிற ஊர்களுக்கு வந்து செல்லும் பயணிகளின் நலனுக்காகவும் அரக்கோணம் வடக்கு என பெயர் வைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையப் போக்குவரத்துத் துறை ஆலோசனையில் அரக்கோணம் வடக்கு என்ற பெயர் தற்போது அப்பகுதியில் இருக்கும் வடக்கு கேபினோடு ஒத்து போவதால் ரயில்களின் தொடர் இயக்கத்துக்கு இது பிரச்னை ஏற்படுத்தாது என்பதால் இப்பெயரையே வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த புதிய ரயில் நிலையம், புதிய குறுக்குப்பாதை அமைக்கப்பட்டால் அரக்கோணம் சந்திப்பு மிகப்பெரிய போக்குவரத்து தடமாக மாறும் என்பது நிரூபனமாகிறது.
எனவே, வரும் ஆண்டில் அரக்கோணம் ரயில் நிலையம் நவீனப்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த புதிய ரயில் நிலையத்தால் அரக்கோணம் பகுதி மேலும் முக்கியமான கேந்திரமாக மாறும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணி. (கோப்புப் படம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
