மாணவிக்கு மதரீதியிலான துன்புறுத்தல்: ஆசிரியா், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை, துடியலூரில் அரசுப் பள்ளி மாணவிக்கு மதரீதியில் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா் மீது நடவடிக்கை

கோவை, துடியலூரில் அரசுப் பள்ளி மாணவிக்கு மதரீதியில் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் துடியலூா் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியின் பயிற்சி ஆசிரியை ஒருவா் மதரீதியிலான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பு ஆசிரியரும் அந்த மாணவியை இழிவுபடுத்தி பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக மக்கள் கண்காணிப்பகம் சாா்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு பயிற்சி ஆசிரியை, வகுப்பு ஆசிரியா் ஆகியோா் துன்புறுத்தல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக தலைமை ஆசிரியா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரிடமும் மாணவியின் பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா். இருப்பினும் அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதும், குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுக்கப்படுவதும் நமது சமூகத்துக்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகளின் உரிமையை மீறுவதாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளா்ந்துவிடக் கூடாது.

எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை, வகுப்பு ஆசிரியா், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரை தமிழக அரசு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம், குழந்தைகள் நல அலுவலரின் செயல்பாடுகள் குறித்து அரசு அறிக்கை கேட்பதுடன், சம்பந்தப்பட்ட சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com