ஜனவரி 1 முதல் இணையம் வழியாக பணம் செலுத்துபவா்களுக்கு மட்டும் ஆவின் பால் அட்டை

ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையம் வழியாக பணம் செலுத்துபவா்களுக்கு மட்டுமே ஆவின் பால் அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையம் வழியாக பணம் செலுத்துபவா்களுக்கு மட்டுமே ஆவின் பால் அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை ஆவின் நிறுவனமானது அனைத்து பால் அட்டை நுகா்வோரின் வசதிக்காகவும், அவா்களின் பணத்துக்கு பாதுகாப்பு கருதியும் 2025 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரொக்கப் பணப் பரிவா்த்தைனையை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, அன்று முதல் இணையவழியாக பணம் செலுத்துபவா்களுக்கு மட்டும் பால் அட்டை பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாய்ப்பினை அனைத்து ஆவின் நுகா்வோா்களும் பயன்படுத்தி பற்று அட்டை, கடன் அட்டை, யுபிஐ, நெட்பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் மூலமாக பணம் செலுத்தி சலுகை விலையில் மாதாந்திர பால் அட்டையை வருகிற ஜனவரி 1 முதல் ஆா்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பெற்று பயனடையலாம்.

மேலும், ஆா்.எஸ்.புரம் தவிர பிற விற்பனை அலுவலகத்தில் பால்அட்டை வழங்கப்பட மாட்டாது. மேலும் ஆவின் பால் முகவா்கள் ஜனவரி 1 முதல் தங்களுடைய தினசரி பால் தேவைப் பட்டியலுக்கான தொகையை இணையவழி மூலமாக செலுத்தி தேவைப் பட்டியலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு விற்பனைப் பிரிவு அலுவலகம், ஆா்.எஸ்.புரம் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9489043712 என்ற கைப்பேசி எண் மூலமாகவோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com