கோவையில் இன்று காா் பந்தயம் தொடக்கம்
கோவை, ஜூலை 26: கோவையில் ப்ளூ பேண்ட் எஃப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய ரேலி சாம்பியன்ஷிப் காா் பந்தயத்தின் 3-ஆவது சுற்று போட்டி சனிக்கிழமை (ஜூலை 27) தொடங்குகிறது.
இந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று சென்னையிலும், இரண்டாவது சுற்று நாசிக்கிலும் நடைபெற்ற நிலையில், கோவை எல் அண்ட் டி சாலை அருகே உள்ள எஸ்.எம். அக்ரோ வளாகத்திலும், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரிலும் ஜூலை 27, 28-ஆம் தேதிகளில் மூன்று சுற்று போட்டி நடைபெறுகிறது.
போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடியசைத்து காா்களின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா், கோவை ஆட்டோ ஸ்போா்ட்ஸ் கிளப் உறுப்பினா்கள், போட்டியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
2 நாள் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 சுற்றுகள் நடைபெறுகின்றன. இதில் ஜூனியா், பெண்கள், கிளாசிக் காா் பிரிவு, எஸ்யுவி காா் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெறும் வீரா்களுக்கு ரூ.9.35 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

