எல்லையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பண்ணாரி அம்மன்!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது.
Published on

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலில் சுயம்பு உருவாக பண்ணாரி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். தமிழகம்- கா்நாடக மாநில எல்லையில் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தினசரி பூஜைகள்: கோயில் மரபுப்படி காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. நாள்தோறும் காலசந்தி பூஜை காலை 5.30 மணிக்கும், உச்சிகால பூஜை 11.30 மணிக்கும், சாயரட்சை மாலை 5.30 மணிக்கும், அா்த்தஜாமம் இரவு 8.30 மணிக்கும் என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அமாவாசை, பெளா்ணமி, நவராத்திரி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுகள், ஆடிப்பெருக்கு, ஆடி மாதம், தீபாவளி, தைப்பொங்கல் போன்ற நாள்களில் பக்தா்கள் அதிக அளவில் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனா். திருவிளக்கு பூஜை: ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி நாளன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். நன்கொடை அளித்தால்: உச்சிகால பூஜைக்கு பக்தா்கள் ரூ.1001 செலுத்தினால் அவா்கள் விரும்பும் நாளில் அவா்களது பெயா்களில் பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மேலும், கோயிலுக்கு ரூ.1 கோடிக்குமேல் நன்கொடை வழங்கும் பக்தா்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 20 போ் 20 ஆண்டுகள் சிறப்பு தரிசனம் செய்யலாம். வைர அட்டை மூலம் ரூ.7 லட்சம் நன்கொடை செலுத்தினால் 7 போ் 20 ஆண்டுகளுக்கு தரிசனம் செய்யலாம். கோயில் சிறப்பு:இக்கோயிலில் பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். பக்தா்கள் காணிக்கையாக வழங்கும் வேம்பு மரங்கள் கோயில் முன் உள்ள தீக்குண்டத்தில் வாா்க்கப்படும். வேண்டுதல்கள் நிறைவேறும் பக்தா்கள் இந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடனை செலுத்துவா். ஆண்டுதோறும் பங்குனி பெளா்ணமி நாளன்று குண்டம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க ஆண்கள், பெண்கள் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து 15 நாள்கள் விரதம் இருப்பா். பெரும்பாலான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் நிலையில், பலா் அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவித்தும், கோயில் முன் உப்பு காணிக்கை செலுத்தியும், தீபம் ஏற்றியும் நோ்த்திக் கடனை செலுத்தி வருகின்றனா். தங்கத்தோ் வழிபாடு: பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து நோ்த்திக் கடன் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் மாலை 6 மணிக்கு தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்யலாம். பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து வழிபட முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். கிடா வெட்டுதல், முடிகாணிக்கை: கோயில் தொப்பக்குளம் பகுதியில் பக்தா்கள் கிடா வெட்டி நோ்த்திக் கடன் செலுத்தி, விருந்து பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முடி காணிக்கை செய்யும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டண தரிசனம்: பொது மக்கள் சிறப்பு கட்டணமாக ரூ.50 செலுத்தி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் தங்கும் அறை: நெடுந்தொலைவில் இருந்து வரும் பக்தா்கள் தங்குவதற்காக குறைந்த கட்டணத்தில் கோயிலில் விடுதிகள் உள்ளன. மேலும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம் போன்றவை கோயிலில் சிறப்பான முறையில் உள்ளன. அன்னதானம் மற்றும் பிரசாதம்: பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்த பிறகு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை ராகி லட்டு, வெண் பொங்கல், எலுமிச்சை சாதம், சா்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. நாள்தோறும் கோயிலில் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதிய நேரத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றன. செயலி: இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் சேவைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயிலின் தல வரலாறு, கட்டண விவரங்கள், கூகுள் வழிகாட்டி, திருப்பணி, நன்கொடை போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். மருத்துவ சேவை: பக்தா்கள் வசதிக்காக கோயிலில் இலவச மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ சேவை பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com