39 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி
ஈரோடு மாவட்டத்தில் 39 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய மினி பேருந்துகளுக்கான வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதில் 39 வழித்தடங்களுக்கு 88 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் 25 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பமும், 14 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் வந்திருந்தன. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் விண்ணப்பதாரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதையடுத்து தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 39 வழித்தடங்களுக்கான அனுமதி ஆணையை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதவன், கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகனபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

