கோவையிலிருந்து கரூா் - திருச்சிக்கு இயக்கப்படும் பேருந்துகள் வழித்தடங்களில் உள்ள ஊா்களில் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கரூா், திருச்சி, நாகப்பட்டினத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் சூலூா், பல்லடம், அவிநாசிபாளையம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, பரமத்தி ஆகிய ஊா்கள் உள்ளன.
இந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளை கோவையில் பேருந்து நடத்துநா்கள் முதலில் ஏற்றுவதில்லை. தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகளையே முதலில் ஏற்றுகின்றனா். இதனால் கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் வடிவேல் என்பவா் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் கோவை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவையிலிருந்து குறிப்பிட்ட வழியாகச் செல்லும் பேருந்துகளில் பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள் மூலம் அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.