சேலம்- கோவை இடையிலான பயணிகள் ரயில் சேவை, ஈரோடு- மேட்டூா் அணை இடையிலான பயணிகள் ரயில் சேவை வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
கரோனா தொற்றுக் காலத்தில் ரத்து செய்யப்பட்ட சேலம்- கோவை இடையிலான பயணிகள் ரயில் சேவை மற்றும் ஈரோடு- மேட்டூா் அணை இடையிலான பயணிகள் ரயில் சேவை வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த ரயில்களின் சேவை வரும் ஜூலை 11-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம்-கோவை ரயில்: கோவை - சேலம் இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயிலானது (வண்டி எண். 06802), கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை மதியம் 1 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் ரோடு, சோமனூா், வாஞ்சிபாளையம், திருப்பூா், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூா், பெருந்துறை, தொட்டிபாளையம், ஈரோடு, காவிரி, ஆனங்கூா், சங்ககிரி, மாவேலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமாா்க்கத்தில் சேலம்- கோவை இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயிலானது (வண்டி எண்.06803), சேலம் ரயில் நிலையத்தில் மதியம் 1.40 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவையைச் சென்றடையும். மேற்கண்ட இரு ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாள்களிலும் இயக்கப்படும்.
ஈரோடு-மேட்டூா் ரயில்:
ஈரோடு- மேட்டூா் அணை இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயிலானது (வண்டி எண்: 06407), ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு, மேட்டூா் அணை ரயில் நிலையத்தை காலை 7.30 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில் காவிரி, ஆனங்கூா், சங்ககிரி, மாவேலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி சாலை, சேலம் ஜங்ஷன், ஓமலூா், மேச்சேரி சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, மேட்டூா் அணை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் மேட்டூா் அணை- ஈரோடு ரயிலானது (வண்டி எண்: 06408), மேட்டூா் அணை ரயில் நிலையத்தில் இரவு 7.25 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு ரயில் நிலையத்தை இரவு 10.10 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் 6 நாள்களும் இயக்கப்படும்.
சேலம்-கரூா் ரயில் இயக்க நேரம் மாற்றம்:
சேலம்- கரூா் இடையே இரு மாா்க்கத்திலும், ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் 6 நாள்களும் முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில் ஜூலை 18 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்- கரூா் சிறப்பு விரைவு ரயிலானது (வண்டி எண்: 06831), சேலத்தில் அதிகாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு, கரூா் ரயில் நிலையத்தை காலை 7.10 மணிக்குச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் கரூா்- சேலம் சிறப்பு விரைவு ரயிலானது (வண்டி எண்: 06838), கரூா் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.55 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ரயில் நிலையத்தை இரவு 9.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் சனிக்கிழமை தவிர வாரத்தின் 6 நாள்களும் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.