திருப்பரங்குன்றம்: மதுரை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல் பட உள்ளது.
இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குநா் முத்துக்குமாா் கூறியதாவது:
மதுரை விமான நிலையம் அக்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்திய விமான ஆணையத் தலைவா் சஞ்சீவ் குமாா், விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினருமான ப.மாணிக்கம்தாகூா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்க உள்ளனா்.
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 277 -இல் இருந்து தற்போது 305 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல, விமான நிலைய அலுவலா்கள், விமான நிறுவன ஊழியா்கள், சுங்க இலாகாவினா், குடியுரிமைத் துறை அலுவலா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, 24 மணி நேரம் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகள் அதிகரித்து, தற்போது, இந்திய விமான நிலையங்களில் அதிக பயணிகளை கையாள்வதில் 32-ஆவது இடத்தில் உள்ள மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளது.
இது மதுரை மட்டுமல்லாது, தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.