பழனி வையாபுரி குளத்தை தூர்வாரி பாதுகாக்கும் பணி

பழனி அடிவாரத்தில் உள்ள  புண்ணிய தீர்த்தமான வையாபுரி குளத்தை தூர்வாரி பாதுகாக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வியாழக்கிழமை துவக்கிவைத்தார்.
Updated on
1 min read

பழனி அடிவாரத்தில் உள்ள  புண்ணிய தீர்த்தமான வையாபுரி குளத்தை தூர்வாரி பாதுகாக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வியாழக்கிழமை துவக்கிவைத்தார்.

  பழனி நகரின் பிரதானமான பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  வையாபுரி குளம், நகரின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது. ஆனால், தற்போது இக் குளம் சாக்கடைகளின் சங்கமமாகி, சுகாதாரக்கேட்டை பரப்பி வருகிறது.

  எனவே, வையாபுரி குளத்தை தூர்வாரி பாதுகாக்கும்பொருட்டு, விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில், அழகு வையாபுரி குளம் என்ற திட்டம் துவக்கப்பட்டது.  இப்பணியில், பல்வேறு சமூகநல ஆர்வலர்களும், சமூக நலப்பணி இயக்கங்களும் பங்கேற்றுள்ளன. இதற்கு, அரசிடம் சிறப்பு நிதி கேட்டுப்பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், வியாழக்கிழமை வையாபுரி குளத்தில் தூர்வாரும் பணியை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இக் குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

  இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பழனிக்கு திருவிழாக் காலங்களில் மட்டும் பக்தர்கள் வந்து செல்லும் நிலை மாறி, தற்போது ஆண்டு முழுக்க பக்தர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களோடு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் வகையில், நகரில் சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே இருந்தால், வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், இதற்கு நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

  முதல் கட்டமாக, ஸ்ரீபாலதண்டாயுதபாணி பக்தர் பேரவை சார்பில் ரூ. 10 ஆயிரம் நிதி பெறப்பட்டது. விழாவின்போது, பிரசாத ஸ்டால் ஹரிஹரமுத்து ரூ. 1 லட்சத்துக்கும், நெய்க்காரபட்டி அரிமா சங்கம் சார்பில் ரூ. 50 ஆயிரத்துக்கும் காசோலைகள்  வழங்கப்பட்டன.

  விழாவில், நகர்மன்றத் தலைவர் வேலுமணி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், அழகு வையாபுரி குளம் இயக்கத் தலைவர் அரிமா மயில்சாமி, துணைத் தலைவர் பிரசாத ஸ்டால் ஹரிஹரமுத்து, செயலர் விவேகானந்தா சேவா டிரஸ்ட் பெரியசாமி, பொருளாளர் அரிமா பெருமாள், தமிழ் தேசிய மனிதநேய அறக்கட்டளை தமிழ்மாறன், ரோட்டரி தலைவர் சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு சமூகநல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com