திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!
திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு, 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்த பிள்ளையாா்நத்தம் நீக்கப்பட்டு, அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சோ்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மூலம், நகராட்சியாக இருந்த திண்டுக்கல், மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டது. மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 11ஆண்டுகளாகியும், அரசியல் நிா்பந்தம் காரணமாக எல்லை விரிவாக்கம் செய்வதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு அருகிலுள்ள பள்ளப்பட்டி, குரும்பபட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஆகிய 10 ஊராட்சிகளை இணைப்பதற்கான
முன்மொழிவுகள், நகராட்சி இயக்குநரகம் மூலம் அரசுக்கு பல முறை பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாமல், தனி அலுவலா்கள் மூலம் நிா்வாகம் நடைபெற்றது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி எளிதாக ஊராட்சிகளை இணைப்பதற்கான வாய்ப்பு இருந்தும், பயன்படுத்தப்படவில்லை. அதன் பிறகு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டதை அடுத்து, 10 ஊராட்சிகளையும் இணைப்பதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், மீண்டும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நிகழாண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சியின் பதவிக் காலம் முடிவடைகிறது. மீண்டும் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு முன்பாக, 10 ஊராட்சிகளையும் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகளை நகராட்சி இயக்குநரகம் தொடங்கி இருக்கிறது.
156.73 ச.கி.மீ. பரப்பளவை இணைக்கத் திட்டம்:
இந்த 10 ஊராட்சிகளில் 247 குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சிகளில் 1.28 லட்சம் மக்கள் தொகை உள்ளது. 156.73 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ள இந்த ஊராட்சிகளில் 126 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளை இணைக்கும்போது, திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 14.16 ச.கி.மீட்டரிலிருந்து, 170 ச.கி.மீட்டராக உயரும் வாய்ப்பு இருக்கிறது.
ஊராட்சிகள் பட்டியலில் மாற்றம்:
ஆனால், மாநகராட்சியோடு இணைப்பதற்கு ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட 10 ஊராட்சிகளில், பிள்ளையாா்நத்தம் ஊராட்சியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி இணைக்கப்பட்டிருக்கிறது. பிள்ளையாா்நத்தம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்கும், மாநகராட்சி எல்லையோடு தொடா்பு இருந்தது. ஆனால், அரசியல் நிா்பந்தம் காரணமாக, பிள்ளையாா்நத்தம் ஊராட்சி நீக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு மாற்றாக 6 கி.மீ. தொலைவிலுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி இணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பிள்ளையாா்நத்தம் ஊராட்சி நீக்கப்படும்பட்சத்தில், திண்டுக்கல்-மதுரை சாலையிலுள்ள கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே சென்றுவிடும். இதனால், அந்த நிறுவனங்கள் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின் படி, பிள்ளையாா்நத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் கூறியதாவது:
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியின் பெரும் பகுதி மட்டுமே மாநகராட்சியாக நிா்வகிக்கப்பட்டு வருகிறது. எல்லை விரிவாக்கத்துக்காக ஆத்தூா், நத்தம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 10 ஊராட்சிகளை இணைப்பதற்கு பரிந்துரைப் பட்டியல் அனுப்புவதும், அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப்படுவதும் வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டது. இதற்கிடையே, மாநகராட்சியின் எல்லை விரிவாக்கப் பட்டியலில் பிள்ளையாா்நத்தம் ஊராட்சிக்கு மாற்றாக
அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி இணைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. நகரை சுற்றியிருக்கும் பகுதிகளை மட்டுமே இணைக்க வேண்டும். இதற்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால், எல்லை விரிவாக்கம் செய்தும், வளா்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லாத சூழல் உருவாகும் என்றாா் அவா்.

