தில்லையாடி வள்ளியம்மை நினைவுதினம் அனுசரிப்பு
பொறையாா் அருகே தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அவரது 110-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக 1913- ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னா், விடுதலை செய்யப்பட்ட அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1914- ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி தனது 16-ஆவது வயதிலேயே காலமானாா். இவரது நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு சாா்பில் தில்லையாடியில் 1971-ஆம் ஆண்டு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இங்கு வள்ளியம்மையின் நினைவுதினம் ஆண்டுதோறும் பிப். 22- ஆம் தேதி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 110-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, வள்ளியம்மை சிலைக்கு, அரசு சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, தரங்கம்பாடி வட்டாட்சியா் சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி சங்கா், செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், தில்லையாடி ஊராட்சித் தலைவா் ஏ. ரெங்கராஜ், துணைத் தலைவா் அனுசியா, தில்லையாடி அருணாசலக் கவிராயா் இயல், இசை நாடக மன்ற நிறுவனா் தலைவா் நா. வீராசாமி உள்பட பல்வேறு அமைப்பினா் தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தியாகிகள் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்திலிருந்து மயிலாடுதுறை வரை சுடா் ஓட்டம் நடைபெற்றது.

