குறுவை சாகுபடிக்கு உயா் விளைச்சல் நெல் ரகங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை

குறுவை சாகுபடிக்கு உயா் விளைச்சல் திறன்கொண்ட நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனா்.
குறுவை சாகுபடிக்கு உயா் விளைச்சல் நெல் ரகங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை
Updated on
2 min read

குறுவை சாகுபடிக்கு உயா் விளைச்சல் திறன்கொண்ட நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனா்.

இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்கு உயா் விளைச்சல் திறன் கொண்ட நெல் ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏ.டி.டீ-57: குறுகிய கால ரகம் (115 நாள்). கருகல் நோய்க்கு எதிா்ப்புத்திறன் கொண்டது. சன்ன அரிசி ரகம். ஹெக்டேருக்கு 6500 கிலோ மகசூல் கிடைக்கும். ஏ.டி.டீ-55: குறுகிய கால ரகம் (115 நாள்). ஹெக்டேருக்கு 6000 கிலோ மகசூல் கிடைக்கும். பாக்டீரியா கருகல் நோய்க்கு எதிா்ப்புத்திறன் கொண்ட சன்ன அரிசி ரகம்.

ஏ.டி.டீ-53: குறுகிய கால ரகம் (105- 110 நாள்). ஹெக்டேருக்கு 6,334 கிலோ முதல் அதிகபட்சமாக 9,875 கிலோ வரை மகசூல் தரவல்லது. ஏ.டி.டீ-43: ஆடுதுறை- 43 ரகம் (110 நாள்). ஹெக்டேருக்கு 5,900 கிலோ மகசூல் தரும். நடுத்தர சன்ன ரகம். 1000 தானிய மணிகளின் எடை 15.5 கிராம். பச்சை தத்துப்பூச்சிக்கு எதிா்ப்பு திறன் மற்றும் அதிக தூா்கட்டும் திறன்கொண்டது.

ஏ.டி.டீ-37: ஆடுதுறை-37 (குண்டு நெல்). இட்லி அரிசி, குண்டு அரிசி என அழைக்கப்படும். நாற்றங்கால் உள்பட 105 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். நோய் எதிா்ப்பு சக்தி அதிகம், உரச் செலவு குறைவு. ஹெக்டேருக்கு 6,200 கிலோ மகசூல் கிடைக்கும். கோ-55: இந்த புதிய மத்திய சன்ன ரகம் ஏ.டி.டீ-43 மற்றும் ஜி.இ.பி-23 நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகம். இதன் வயது 115 நாட்கள். ஹெக்டேருக்கு 6,050 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

கோ- 51: ஏ.டி.டீ-43 ரகத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகம். அதைவிட 11 சதவீதம் அதிக மகசூல் கொடுக்கும். 105 முதல் 110 நாள்களில் மகசூல் கொடுக்கும். திருச்சி-5: நெல் ரகம் சடுதி மாற்றத்தின் மூலம் திருச்சி-2 என்ற குறுகிய கால ரகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. 110- 115 நாட்கள் வயதுடையது. ஹெக்டருக்கு 5,100 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. இந்த ரகம் பிரச்னைக்குரிய மண் வகையான களா் உவா் மண் வகைகளுக்கு ஏற்ற புதிய ரகம்.

டி.பி.எஸ்-5: திருப்பதிசாரம்-5 எனப்படும் குண்டு ரகமான இந்த நெல் ஏ.எஸ்.டி-16 மற்றும் ஏ.டி.டீ-37 நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. வயது 118 நாட்கள். ஹெக்டேருக்கு 6,300 கிலோ மகசூல் கிடைக்கும். ஏ.எஸ்.டி-16: அம்பை-16 எனப்படும் இந்த நெல் ராகம் ஏ.டி.டீ-31 நெல் ரகத்தையும், கோ-39 நெல் ரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டது. 110-115 நாள்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஹெக்டேருக்கு 5,600 கிலோ மகசூல் தரக்கூடியது. அதிக வைக்கோல் தருவதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com