ஸ்ரீ தர்ம சாஸ்தா சத் சங்கத்தின் 'சாஸ்தா ப்ரீதி'

பிரம்மசரியத் திருக்கோலத்தில் குத்துக்காலிட்டு, யோக சின் முத்திரையுடன் அருள்பாலிக்கும்  திருவுருவமும், கையில் அம்பு- வில்லுடன் புலியின் மீது அமர்ந்தவாறு வரும் வீர அழகுத் தோற்றமும் பொருந்திய ஸ்ரீ ஐயப்பன
Updated on
3 min read

பிரம்மசரியத் திருக்கோலத்தில் குத்துக்காலிட்டு, யோக சின் முத்திரையுடன் அருள்பாலிக்கும்  திருவுருவமும், கையில் அம்பு- வில்லுடன் புலியின் மீது அமர்ந்தவாறு வரும் வீர அழகுத் தோற்றமும் பொருந்திய ஸ்ரீ ஐயப்பனுக்கு பக்திப் பாமாலை பஜனைகள் நடைபெறும் பெருமைமிகு மாதம் கார்த்திகை.

இம்மாதம் தொடங்கிவிட்டாலே பல இடங்களிலும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் பக்தி கோஷம் ஐயப்பப் பஜனைக் கூட்டங்களில் களைகட்டும்  கார்த்திகை மாதம் தொடங்கி 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து சபரிமலை சென்று 18 படிகளில் ஏறி நேர்த்தி செலுத்துவதை லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாக்கியமாகக் கொள்வர்.

ஸ்ரீ தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கு கேரள மாநிலத்தில் 18 இடங்களில் கட்டப்பட்டுள்ள 18 கோயில்கள் போன்று, சபரிமலையில் இந்த 18 புண்ணிய திருப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.  சபரிமலை போன்று இந்தியாவின் பல இடங்களிலும் ஐயப்பப் பக்தர்கள் ஸ்ரீ ஐயப்பனின் திருவுருவப் படத்தையும், 18 படிகளையும் வைத்து பூஜித்து வருகின்றனர்.

தில்லியில் உள்ள கோண்டலி ஸ்ரீ தர்மசாஸ்தா சத் சங்கத்தினரும் பல ஆண்டுகளாக  ஸ்ரீசாஸ்தா ப்ரீதியைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 18-வது சாஸ்தா ப்ரீதி மஹோத்சவத்தைச் சிறப்பாகக் கொண்டாட உள்ளனர்.

இந்த சத் சங்கம், புது தில்லியின் கிழக்குப் பகுதி யமுனைக் கரையோரம் அமைந்துள்ள மயூர்விஹார் ஃபேஸ் 3-ல் செயல்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சாஸ்தா ப்ரீதியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு சாஸ்தா ப்ரீதி வைபவம் நவம்பர் 11 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

1994-ம் ஆண்டில் ஐயப்பப் பக்தர்கள் சிலரால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இப்பூஜை, பின்னர் இரு நாள் விழாவாக நடத்தப்பட்டது. தற்போது 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயூர்விஹார் ஃபேஸ் 3-ல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் திருக்கோயில்  வளாகத்தில் ஸ்ரீ ஆதி சங்கரா ஹாலில் நடைபெறும் இந்த வைபவம் குறித்து கோண்டலி ஸ்ரீ தர்மசாஸ்தா சத் சங்கத்தின் நிர்வாகி கே. ராமசாமி கூறியது:

சாஸ்தா ப்ரீதி, ஸ்ரீ ஐயப்பனை நினைத்து வழிபடும் பூஜை. இப்பூஜை தொடக்கத்தில் கேரளத்தில்தான் அதிகமாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பூஜை நாள்களில் அன்னதானம் மிகவும் விசேஷமான இடம் வகிக்கிறது.

சாஸ்தா ப்ரீதி மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சாஸ்தா ஆவாஹனம், ருத்ராபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, சதுர்வேத பாராயணம், ஸ்ரீ ஐயப்பன் விரதம், அவதார ஸ்லோகம், வரவு பாட்டு, ஆவேசப் பாட்டுகளுடன் பஜனை சிறப்பாக நடைபெறும்.

நுனி வாழை இலையைச் சுற்றி சந்தனம், குங்குமம் இட்டு பகவான் முன் வைக்கப்படும். பின்னர், ஐயப்ப பக்தரால் இலைகட்டும், பிரசாதமும் விழா நடத்துவோருக்குக் கொடுக்கப்படும். அதன்பிறகு அன்னதானம் விநியோகம் தொடங்கும். தீபாராதனையுடன் ஹரிவராசனம் பாடி இரவில் விழா முடிவுறும்.

 விழாவின்போது கேரளத்தின் பச்சடி, கூட்டுக்கறி, துவரன்நலன், ரசகாலன், ரசம், பப்படம், பால் பாயாசம், சதசதயம், நெய் பாயாசம், புளி இஞ்சி ஊறுகாய், மோர் ஆகியவை நுனி வாழை இலையில் மகா பிரசாதமாக வழங்கப்படும்.

  சாஸ்தா ப்ரீதி நிகழ்ச்சியில் தென் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாகவதர்கள் பங்கேற்கின்றனர். பாகவதர்களை தென் இந்தியாவில் இருந்து இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதை எங்கள் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.      தவிர, புதிய இளம் தலைமுறை இசைக் கலைஞர்களையும் மேடையேற்றும் வாய்ப்பையும் அளிக்கிறோம். ஸ்ரீ சபரி யாத்திரை, ஸ்ரீ ஐயப்பப் பூஜை, ஸ்ரீ சாஸ்தா ப்ரீதி ஆகிய முக்கிய மூன்று நிகழ்ச்சிகளையும் தமிழ் மாதங்களான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடத்தி வருகிறோம்.

இந்த விழா நடத்துவதற்கு ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் மிகுந்த உதவி அளித்து வருகின்றனர். தவிர, மயூர் விஹார், வசுந்தரா என்கிளேவ், வைசாலி, நொய்டா ஆகிய பகுதிகளின் பக்தர்களும் உதவி வருகின்றனர்.

சத் சங்கத்தின் குருசுவாமிகளாக லட்சுமணன், பி.கே. குட்டி (மயூர்விஹார்), ஸ்ரீ ரங்கநாதன், ராமசுவாமி (துவாரகா), ஐயப்ப சுப்பிரமணியன் (சித்தார்த்தா என்கிளேவ்), சிவராமகிருஷ்ணன் (கேசவபுரம்) ஆகியோர் உள்ளனர்.  இந்த சத் சங்கத்தைத் தொடங்கியவர்கள் சுவாமிநாதன், டி.கே. சுப்பிரமணியன், கே.ஆர். கிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் ஆவர். அவர்கள் தற்போது வெளியூரில் உள்ளனர். இருப்பினும், அவர்களுடைய பூரண ஒத்துழைப்போடு நடத்தி வருகிறோம்.

அன்னதானத்திற்கான உணவு தயாரிப்புகளை ஸ்ரீ குமார் கேட்டரர்ஸ் நிறுவனம் செய்கிறது. மயூர்விஹார் ஃபேஸ் 2-வைச் சேர்ந்த ஸ்ரீ ராமசுப்பிரமணியன் குடும்பத்தார் பொருளுதவி அளித்து வருகின்றனர் என்றார் ராமசாமி.

சாஸ்தா ப்ரீதி நிகழ்ச்சிகள் விவரம்

நவ. 11 மாலை 6.30 மணிக்கு பெங்களூர் வினயசந்திரா மேனன் குழுவினரின் பஜனை.

நவ.12 மாலை 6.30 மணிக்கு கடையநல்லூர் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் அபங் திவ்யநாமா பஜனை.

நவ.13 மாலை 4 மணிக்கு கடலூர் கோபி பாகவதர் குழுவினரின் பாண்டுரங்க லீலா பஜனை.

 நவ.14 மாலை 6.30 மணிக்கு ஹைதராபாத் கவசேரி சிதம்பரம் குழுவினரின் பஜனை.

நவ.15 மாலை 6.30 மணிக்கு சென்னை வி.கார்த்திக் ஞானேஸ்வர் குழுவினரின் பஜனை.

நவ.16 மாலை 6.30 மணிக்கு கொடுந்திரபுள்ளி சுப்புராமன் குழுவினரின் பஜனை.

நவ.17 மேலர்கோடு ரவி பாகவதர் குழுவினரின் பஜனை.

 நவ.18 கோட்டயம் விஸ்வரூபா பஜனை சமிதியின் பஜனை.

 நவ.19 காலை 10 மணிக்கு நூருணி பாலகோகுலம் அவர்களின் சாஸ்தா பாட்டு நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு ஈரோடு ராஜாமணி பாகதவர் குழுவினரின் பஜனை.

நவ.20 காலை 10 மணிக்கு கோவை ஜெயராமன் பாகவதரின் சாஸ்த பஜனை, மாலை 6.30 மணிக்கு சென்னை செல்வி ஸ்ரீவித்யா குழுவினரின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com