கிராம தெய்வங்கள்தான் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள்

திருநெல்வேலி,ஜூன் 6: கிராம தெய்வங்கள்தான் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் என பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறினார். திருநெல்வேலி சந்திப்பு, சிந்துபூந்துறையில் உள்ள புத்தா பண்பாட்டு ஆய்வு மையத்தில் ஞ
Updated on
1 min read

திருநெல்வேலி,ஜூன் 6: கிராம தெய்வங்கள்தான் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் என பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறினார்.

திருநெல்வேலி சந்திப்பு, சிந்துபூந்துறையில் உள்ள புத்தா பண்பாட்டு ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், "கொலையில் உதித்த தெய்வங்கள்' என்ற தலைப்பில் ஆ.சிவசுப்பிரமணியன் பேசியது:

வயோதிகராகி ஒருவர் இறப்பது சாதாரணமாக கருதப்படுகிறது. அதேவேளையில் கொலை, தற்கொலை, விபத்து போன்றவற்றின் ஒருவர் இறப்பதை சாதாரணமாக கருதுவது கிடையாது. இவ்வாறு இறப்பவர்களின் ஆவி, கோபமாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

அந்த ஆவியை சாந்தப்படுத்தும்விதமாக, அந்த ஆவியை நிலைநிறுத்தி நடுகல் நிறுத்துகிறார்கள்.

பின்னர் அதற்கு பூஜை செய்கிறார்கள். இந்த நிகழ்வுதான் சங்ககாலம் தொடங்கி இன்றுவரை கிராமப்புற தெய்வ வழிபாடாக நடைபெறுகிறது. இவ்வாறு போர்க்களத்தில் இறப்பவர்கள், சாதி மீறி காதலித்ததால் அதனால் கொலை செய்யப்படுகிறவர்கள், பாலியல் வன்முறையில் இருந்து பெண்ணை காப்பாற்ற முயன்று இறந்தவர்கள், பாலியல் வன்முறைக்கு இறக்கும் பெண்கள் ஆகியோர் தெய்மாக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒன்பதுவித காரணங்களில் கிராம தெய்வங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளோம். ஆனால், இது முடிவு கிடையாது. இந்த கிராம தெய்வங்கள்தான் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு பதிவு செய்யப்படவில்லை. மேலும் இம் மக்களின் வரலாறு, சிலரால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்.

அம் மக்களின் உண்மையான வரலாற்றை நாம் கிராம தெய்வங்கள் மூலம் கொண்டுவர வேண்டியுள்ளது. ஒவ்வொரு தெய்வத்துக்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. இதை அரசு ஆவணத்திலோ, கல்வெட்டிலோ, இலக்கியத்திலோ தேட முடியாது. தெய்வங்களைப் பற்றி முறையாகப் பதிவு செய்யும்போது, அதையொட்டி மறைந்திருக்கும் வரலாறும் பதிவு செய்யப்படும். ஒரு தரப்பினர் இத் தெய்வங்களின் வரலாற்றைச் சிதைக்கின்றனர். ஆதலால் ஒடுக்கப்பட்ட, விளிம்பிய நிலையில் உள்ள மக்களின் வரலாற்றை எழுத வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்றார் சிவசுப்பிரமணியன்.

இந் நிகழ்ச்சியில் புத்தா பண்பாட்டு ஆய்வு மைய செயலர் கணேஷ், கிருஷி, பேராசிரியர்கள் ராமச்சந்திரன், மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com