கரூர், ஜன. 3: சாலை விபத்தில் இறந்த கரூர் மாவட்ட திமுக செயலர் வாசுகி முருகேசனின் உருவப்படத்தை கரூரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
வாசுகி முருகேசன் கடந்த நவ. 27-ம் தேதி கோவை அருகே நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உருவப்படம் திறக்கும் நிகழ்ச்சி கரூர் - கோவை சாலையிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், வாசுகி முருகேசனின் உருவப் படத்தை திறந்து வைத்து துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது:
வாசுகி முருகேசனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். விபத்து குறித்த செய்தியை கேட்டதும் முதல்வர் அடைந்த துயரை நான் நேரில் பார்த்தேன். அவர் எங்களுக்கு ஆறுதல் கூறுவார் என்று நினைத்தால், அவருக்கு நாங்கள் ஆறுதல் கூற வேண்டிய நிலையில் இருந்தார்.
அந்த துயரின் வெளிப்பாட்டில்தான் இரங்கல்பா எழுதினார். அதில், அவரின் பெருமை, கழகப் பணி குறித்தும், கழகம் இன்னும் அதிக பொறுப்புகளைப் பெற வேண்டும் என்ற பேராசை கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.
1991-ல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து கழகத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றினார். கருணாநிதி பொன்னர் - சங்கர் கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தவர் வாசுகியின் தந்தை எஸ்.வி. கந்தசாமி.
தோல்வியைக் கண்டு துவழாமல் கழகப் பணியாற்றியதால் மீண்டும் 1996-ல் போட்டியிட வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றார். கரூர், தாந்தோன்றிமலை, இனாம்கரூர் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தார்.
அவர் இறந்து விட்டார் என்பதை நினைக்கவே மனம் ஒத்துக்கொள்ளவில்லை. சுற்று வட்டார மாவட்டங்களுக்கு நான் வந்தபோதும் என்னை வரவேற்றவர். மனதில் பட்டதை அப்படியேச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்.
கட்சிக்கு சோதனை வந்தபோதெல்லாம் கட்சியை கட்டிக்காத்தவர். எனது வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தியதால் எனது தவறுகளையும் தைரியத்தோடு, உரிமையோடு சுட்டிக்காட்டியவர்.
தற்போது நமக்கு படமாகவும், பாடமாகவும் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வாசுகி விட்டுச்சென்றதை நிரப்பும் சூளுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கே ஆறுதல் தேடும் நிலையில் இருக்கும் நாம் எவ்வாறு அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது. அவரது குடும்பத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும் என்றார் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில், போக்குவரத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, கரூர் மக்களவை முன்னாள் உறுப்பினர்கள் கே.சி. பழனிசாமி, பரமத்தி சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.கே.கே. பெரியசாமி, மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், வனத் துறை அமைச்சர் செல்வராஜ், நாகப்பட்டினம் மாவட்டச் செயலர் விஜயன் எம்.பி, புதுக்கோட்டை மாவட்டச் செயலர் அரசு, இ.ஜி. சுகவனம் எம்.பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. பிச்சாண்டி, கலிலூர்ரகுமான், இரா. மாணிக்கம், முன்னாள் அமைச்சர் க. பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் காஞ்சனா கமலநாதன், கே.வி. ராமசாமி, திமுக நிர்வாகி சுப. ராஜகோபால், கரூர் நகரச் செயலர் எஸ்பி. கனகராஜ், ஒன்றியச் செயலர் இரா. உமாபதி, திருவாரூர் மாவட்டச் செயலர் பூண்டி கலைச்செல்வன், திமுக இளைஞரணி துணைச் செயலர்கள் சுபா சந்திரசேகர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் செங்குட்டுவன், புதுக்கோட்டை விஜயா, கவிதைப்பித்தன், மகளிரணி நிர்வாகி நூர்ஜஹான்பேகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பேங்க். சுப்பிரமணியன், தி.க. மாவட்டத் தலைவர் ராஜசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட நிர்வாகி பாஸ்கரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலர்கள் ஆண்டாள் பாலகுரு, இரா. பிரபு, மாவட்ட ஊராட்சித் தலைவர் பூவை. ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.