பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் நாள்தோறும் சுமாா் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குளிா்ச்சி நிலவி, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இருப்பினும், பெரம்பலூா் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தொடா் மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனா். மேலும், கோடை சாகுபடி செய்யும் விவசாயிகள் உழவுப் பணிகளுக்கு ஏற்ற மழையென தெரிவித்துள்ளனா்.
மழையளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்)- செட்டிக்குளம்- 5, பாடாலூா், புதுவேட்டக்குடி தலா - 4, பெரம்பலூா் - 33, எறையூா், வி.களத்தூா் தலா - 21, கிருஷ்ணாபுரம்- 20, தழுதாழை- 40, வேப்பந்தட்டை -29 என மொத்தம்- 177, சராசரியாக 16 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.
