ஒரத்தநாட்டில் பசுவின் வயிற்றிலிருந்த பிளாஸ்டிக் பை, இரும்புப் பொருள்கள் உள்ளிட்ட 15 கிலோ கழிவுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
ஒரத்தநாடு உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு
சொந்தமான 5 வயது ஜெர்ஸி கலப்பின பசு நான்கு நாள்களாக தீவனம் சாப்பிடாததால், செவ்வாய்க்கிழமை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள கால்நடை மருத்துவ வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பசுவை பரிசோதித்ததில், அதன் வயிற்றில் ஆணி, கம்பி மற்றும் செரிமானமாகாத பல்வேறு பொருள்கள் மாட்டின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருள்களால் பசுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பசுவின் வயிற்றில் இருந்த ஆணிகள், பேனா மூடியில் இருக்கக் கூடிய உலோகக் கம்பிகள், ஸ்குரு, கடிகாரத்தில் இருக்கக்கூடிய உதிரி பாகங்கள், கைபேசியின் உதிரி பாகங்கள், கைபேசியின் மேலுறைகள், கூர்மையான கம்பிகள், பேனாக்களின் நுனியில் உள்ள உலோக பாகங்கள், நெகிழிப்பைகள், மாட்டைக் கட்டுவதற்கு பயன்படுத்தும் நைலான் கயிறுகள், பாலியஸ்டர் துணிகள் உள்ளிட்ட 15 கிலோ செரிமானமாகாத பொருள்கள் அகற்றப்பட்டன. கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் க.ந. செல்வக்குமார் அறிவுறுத்தலின்படி, இரா. உமாராணி, ச. செந்தில்குமார், ம. விஜயகுமார், ப. தமிழ்மகன் ஆகியோர் அ. பழனிசாமி முன்னிலையில் அறுவை சிகிச்சையை செய்தனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மாடு நன்றாக தீவனம் சாப்பிடுவதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.