ஏர் இந்தியா டிரான்ஸ் போர்ட் லிமிடெட் ஆட்கள் தேர்வு: இந்தி மொழிக்கு முன்னுரிமை

ஏர் இந்தியா டிரான்ஸ் போர்ட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கும் இந்தி மொழி ‌கட்டாயம் என தெரிவித்து இருப்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏர் இந்தியா டிரான்ஸ் போர்ட் லிமிடெட் ஆட்கள் தேர்வு: இந்தி மொழிக்கு முன்னுரிமை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் இந்தியா டிரான்ஸ் போர்ட் லிமிடெட் சார்பாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் மற்றும் சரக்கு முனையங்களில் ஆட்கள் பணிகளை மேற்கொள்ள 46 பணியிடங்களுக்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளதாக கடந்த மாதம் அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

அதன்படி திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை முதல் நேர்காணல் துவங்கியது. இதற்காக காலை 6 மணி முதலே ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் வந்து குவிந்தனர்.

மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தனர். அப்போது உள்ளூரின் வழக்கு மொழியாக இந்தி மொழிக்கு முன்னுரிமை என நேர்காணல் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இதையறிந்த தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இதுகுறித்து நேர்காணலில் கலந்து கொண்டுள்ள மதியழகன் கூறியது, பத்தாம் வகுப்பு முதல் இளங்கலை படிப்பு வரை கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பொறியியல் படித்தவர்களே அதிக அளவில் நேர்காணலுக்கு வந்துள்ளனர். இந்தி தெரிந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும் குறிப்பிட்டிருந்தாலும் இந்தி கட்டாயம் என்பது இங்கு வந்து வந்த பிறகு தெரிந்து கொண்டதாகக் கூறினார் .

இதேபோல கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்யாணி என்பவர் கூறுகையில்,  எனது மகன் முதுநிலை பொறியியல் படிப்பில்  முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ள நிலையில் வேலை கிடைக்காத காரணத்தால் குறைந்த சம்பளத்தில் இந்த பணிக்கு சேர விரும்பி இந்த நேர்காணலுக்கு  வந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதால் தனது மகனுக்கு வேலை கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான் என வேதனையுடன் தெரிவித்தார் .

ரயில்வே துறை மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழி தெரிந்த வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏர் இந்தியா டிரான்ஸ் போர்ட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கும் இந்தி மொழி ‌கட்டாயம் என தெரிவித்து இருப்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com