கடலூர் மாவட்டத்தில் விதை நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயி ராமலிங்கம், ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் அளித்த மனு விவரம்:
கடலூர் மாவட்டத்தில் தானே புயல், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
வறட்சியால் இனிமேல் விவசாயம் நடைபெறுமா? என்று இருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்துவரும் மழையை நம்பியும் விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடியில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் முழுவதிலும் 1 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது.
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல், உரங்கள் வேளாண் விற்பனை மையங்கள் மற்றும் தனியார் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் வெள்ளை பொன்னி, பி.பி.டி., ஏ.டி.டி.19 மற்றும் 38 போன்ற விதை நெல்லை விரும்பி வாங்கி நாற்று விட்டு வருகின்றனர்.
மொத்த விதை நெல் விற்பனையில் வேளாண்மை துறை மூலம் 18 சதவீதம் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீதம் 82 சதவீதம் விதை நெல் தனியார் விற்பனையாளர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதை சாதகமாகப் பயன்படுத்தி சில தனியார் விற்பனையாளர்கள் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
ஒரு கிலோ வெள்ளை பொன்னி விதை நெல் ரூ.29.60-க்கு கொள்முதல் செய்கிறார்கள். அரசு ரூ.33.40-க்கு விற்பனை செய்கிறது. தனியார் கடைகளில் ரூ.42, 43-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலான கடைகளுக்கு விதை நெல் விற்பனை செய்வதற்கு உரிமம் கிடையாது.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அரசு விற்பனை செய்யும் விலைக்கே விதை நெல்லை தனியாரும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.