கடலூர்-திருச்சி பயணிகள் ரயில் திருப்பாதிரிபுலியூரிலிருந்து புதன்கிழமை (ஆக.15) முதல் இயக்கப்படுகிறது.
கடலூர் நகரில் திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம் சந்திப்பு ஆகிய இடங்களில் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 5 கி.மீ தொலைவில் இரண்டு ரயில் நிலையங்களும் அமைந்துள்ளதால் ஒரு நிறுத்தத்தில் நிறுத்தப்படும் ரயில் மற்றொரு நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளும் கடலூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பாதிரிபுலியூர், துறைமுகம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கு தினமும் காலையில் புறப்பட்டுச் செல்லும் ரயிலை திருப்பாதிரிபுலியூரிலிருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
திருப்பாதிரிபுலியூரில் ரயில் நிற்பதற்கு இடமில்லாததால் துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், மக்கள் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதற்குப் பலனாக தற்போது துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் ரயில் திருப்பாதிரிபுலியூரிலிருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்கிழமை (ஆக.15) முதல் காலை 6 மணிக்கு திருப்பாதிரிபுலியூரிலிருந்து புறப்படும் ரயில் (எண்.78641) 6.15 மணிக்கு வழக்கம்போல் துறைமுகம் சென்றடையும்.
அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு வழக்கமான நேரத்தில் திருச்சியை முற்பகல் 11 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண்.76842 மாலை 3.40 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு துறைமுகத்துக்கு இரவு 8.30 மணிக்கும், திருப்பாதிரிபுலியூருக்கு இரவு 8.45 மணிக்கும் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.