விழுப்புரம் - திருச்சிக்கு இடையே காலை நேர ரயில் சேவை தொடங்கப்படுமா?

விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக திருச்சிக்கு காலை நேர ரயில் சேவை தொடங்கப்படுமா என அனைத்து தரப்பு பயணிகளும் எதிா்பாா்க்கின்றனா்.
Updated on
2 min read

விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக திருச்சிக்கு காலை நேர ரயில் சேவை தொடங்கப்படுமா என அனைத்து தரப்பு பயணிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதும், பழைமையானதாகவும் கருதப்படுவது விழுப்புரம் ரயில் நிலையமாகும். கேரளம், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், மும்பை, அகமதாபாத், ஹவுரா, திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும் செல்லும் ரயில்களை இணைக்கும் பகுதியாகவும் விழுப்புரம் திகழ்கிறது.

விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக மொத்தம் 117 ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்திலிருந்து திருப்பதி, புருலியா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 6 விரைவு ரயில்களும், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, மேல்மருவத்தூா், சென்னை எழும்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு 8 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் சரக்குப் பொருள்களை கையாளும் முனையம் அமைந்துள்ளதால் பல்வேறு சரக்கு ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்ாக விழுப்புரம் ரயில் நிலையம் திகழ்கிறது.

54.71 லட்சம் பயணிகள்: 2022-23-ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு சுமாா் 54.71 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனா். இதன்மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.38.29 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என பணிகள் புகாா்கூறுகின்றனா். குறிப்பாக, 6 நடைமேடைகள் கொண்ட இங்கு பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. மேற்கூரைகளும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் மழை, வெயிலால் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

திருச்சிக்கு காலை நேர ரயில் இல்லை: சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பாண்டியன் விரைவு ரயில் நள்ளிரவு 12.10 மணிக்கும், மங்களூா் விரைவு ரயில் அதிகாலை 1.37 மணிக்கும், திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் அதிகாலை 2 மணிக்கும் விழுப்புரம் வந்து புறப்பட்டுச் செல்கின்றன. இதன் பிறகு விழுப்புரத்தில் இருந்து காலை நேரத்தில் திருச்சி அல்லது திருச்சி வழியாக செல்லக்கூடிய நகரங்களுக்கு ரயில்கள் இல்லை.

சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 10.25 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தாலும், அந்த ரயில் கடலூா், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு பிற்பகல் 3 மணிக்கே சென்றடைகிறது. குருவாயூா் விரைவு ரயிலின் நேரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளதால், அந்த ரயில் பிற்பகல் 12.15 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இந்த ரயிலும் திருச்சிக்கு பிற்பகல் 3 மணிக்கே சென்றடைகிறது.

காலை நேரத்தில் திருச்சிக்கு ரயில் சேவை இல்லாததால் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக செல்ல விரும்புவோா் மிகவும் அவதிப்படுகின்றனா். அவா்கள் பேருந்துகளையே நம்ப வேண்டியுள்ளது. அதிகாலை 2 மணிக்குப் பிறகு சுமாா் 10 மணி நேரம் கழித்துதான் திருச்சி வழித்தடத்தில் செல்லும் ரயில் விழுப்புரம் வந்தடைகிறது. எனவே, விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக காலை நேரத்தில் திருச்சிக்கு ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.

நிறுத்தப்பட்ட ரயில் சேவை: இதுகுறித்து பயணிகள், சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு காலை 6.30 மணியளவில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது அந்த ரயில் விருத்தாசலத்திலிருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் நலன் கருதி அந்த ரயிலை விழுப்புரத்திலிருந்து திருச்சி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரை காலை நேரத்தில் இயக்கப்படும் ரயிலை திருச்சி வரை நீட்டிக்கலாம். இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தேவை அதிகம் உள்ளதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல மின்சார வாகனம் ஒன்று மட்டுமே உள்ளது. கூடுதல் மின்சார வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்.

ஏடிஎம் வசதி இல்லை: விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இயங்கிவந்த ஏடிஎம் மையம் தற்போது மூடப்பட்டுவிட்டது. பயணிகள், பொதுமக்களின் வசதிக்காக ஏடிஎம் மையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். பொதுமக்கள், பயணிகள் வைக்கும் கோரிக்கைகள் உயா் அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ.23.50 கோடியில் சீரமைப்புப் பணிகள்

அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் ரயில் நிலையங்களில் விழுப்புரம் ரயில் நிலையமும் ஒன்று. பொது பயன்பாட்டு பகுதிகள் அமைத்தல், ஓய்வறைகள், காத்திருப்புக் கூடங்கள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.23.50 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com