

விழுப்புரம் : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டியலின சமுதாய மக்கள் கோயிலுக்குள் சென்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன்7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரெüபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், திரெüபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் உத்தரவிட்டதன் பேரில், 2024, மார்ச்22-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகாலப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் போட்டப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 19 - ஆம் தேதி விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டம் முடிவெடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 21-ஆம் தேதி விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காவல், வருவாய், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடர்பாக சமாதானம் செய்வதாக ஒப்புக் கொண்டனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யார்,யாரையும் தடை செய்யமாட்டோம் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் காணப்பட்ட முள்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோயிலை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கோயில் மீண்டும் திறப்பு: இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் திரௌபதியம்மன் கோயில் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு வரும் வழியில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது. விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமார் குப்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு செய்ததற்கு மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோயில் மீண்டும் மூடப்பட்டது. மேலும் கிராமத்தில் பதற்றம் நிறைந்த சூழல் காணப்படுவதால், போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.