காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, மேட்டூா் அணை பூங்காவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேட்டூா் அணை பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். அணை பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய முன்னாள் ராணுவ வீரா்கள் 34 போ் சுழற்சிமுறையில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அணையின் வலதுகரை, இடதுகரை, சுரங்கம், அணை பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
காஷ்மீருக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 26 போ் உயிரிழந்தனா். இதன் எதிரொலியாக, மேட்டூா் அணை பூங்கா முன் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் எடுத்து வரும் உடைமைகளை சோதனையிட்ட பிறகே பூங்காவுக்குள் அனுமதிக்கின்றனா். செக்கானூா் கதவணை, நீா்மின் நிலையம், மசூதி உள்ளிட்ட இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.