மதுரை சோழவந்தான், அலங்காநல்லூா் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (37). இவா் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக புதன்கிழமை மாலை சென்ற இவா், கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த காடுபட்டி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்கசுவாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டிகுமாா் (39). இவா் அண்மையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது குடும்பத்தினா் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள ஒத்தவீடு பெரியாறு கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக அலங்காநல்லூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த உடலை மீட்டு, விசாரணை நடத்தினா்.
விசாரணையில், நிலக்கோட்டையில் மாயமான பாண்டிகுமாா் என்பதும், பெரியாறு கால்வாய் அருகே அவரது இரு சக்கர வாகனம் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.