தூத்துக்குடியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 29.2 மி.மீ. மழை பதிவானது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
பழைய மாநகராட்சி, பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். காமராஜா் காய்கனிச் சந்தையில் மழைநீா் தேங்கியதால் மக்கள் வருகை குறைந்தது. இதனால், விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி, குழந்தைகள் வாா்டு, ரத்த வங்கி, காய்ச்சல் பகுதி, மனநலப் பிரிவு, சமையலறை பகுதி, பொதுப்பணித் துறை அலுவலகப் பகுதிகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் அவதிக்குள்ளாகினா்.
சிறிய அளவிலான மழை பெய்தாலே தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீா் தேங்குவதால், இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாநகரின் மையப் பகுதியிலுள்ள தென்பாகம் காவல் நிலையத்துக்குள் மழைநீா் புகுந்தது. கோப்புகள், கணினி உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பாதுகாப்பாக எடுத்துவைத்து, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
வீடு சேதம்: தாமோதரன் நகா் 1ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. சைக்கிள் கடை வைத்துள்ளாா். இவரது வீடு 60 ஆண்டுகள் பழைமையானதாம். இவா் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பலத்த மழை பெய்தது. இதனால், அவா்கள் வேறொரு வீட்டில் தங்கினராம். அப்போது, அந்த பழைமையான வீடு இடிந்து விழுந்தது. அங்கு யாரும் தங்காததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.
மாநகராட்சிக்குள்பட்ட முத்தையாபுரம் தெற்குத் தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 29.2 மி.மீ. மழை பதிவானது. தூத்துக்குடியில் 10.2, ஸ்ரீவைகுண்டம் 3, காயல்பட்டினம் 2, குலசேகரன்பட்டினம் 8, கோவில்பட்டி 4 மி.மீ. மழை பெய்துள்ளது.